புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 18-10-2018 | 5:43 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. சிறையில் உள்ள அனைத்து அரசியல் கைதிகளுக்கும் B அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 02. எந்தவொரு இந்தியப் புலனாய்வுப் பிரிவும் தம்மைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக, ஜனாதிபதி தெரிவிக்கவில்லை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம், தமக்கெதிரான கொலைமுயற்சி சதித்திட்டத்தை இந்தியாவின் ரோ உளவு அமைப்பு முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவிக்கவில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்னவும் கூறியிருந்தார். 03. பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பாகவிருந்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வாவை, பதவியிலிருந்து நீக்குவதற்கு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தீர்மானித்துள்ளார். 04. சதொச பொருட்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவர் குருணாகல் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 05. தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோருக்கிடையில் நேற்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. எத்தியோப்பிய பிரதமர் அபி அஹமட் (Abiy Ahmed), தமது அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சர் உட்பட பாதியளவு அமைச்சர் பதவிகளுக்கு பெண்களை நியமித்துள்ளார். 02. சபரிமலையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, அதனை அண்மித்த 4 பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுச் செய்திகள் 01. இலங்கை அணியின் லசித் மலிங்கவின் வேகப்பந்து வீச்சே இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணிக்கான பிரதான சவால் என சகலதுறை வீரரான மொயின் அலி கூறியுள்ளார். 02. இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 7 விக்கெட்களால் வெற்றியீட்டியது.