ஜனாதிபதியின் பேச்சுக்கு நரேந்திர மோடி பதில்

ஜனாதிபதியின் பேச்சுக்கு நரேந்திர மோடி பதில்

by Staff Writer 18-10-2018 | 1:07 PM
இந்தியாவின் RAW அமைப்பு தம்மைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக எவ்விதக் கருத்தையும் கூறவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தமைக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பதில் வழங்கியுள்ளார். இந்தக் கொலை முயற்சி தொடர்பில் வெளியான செய்தி திரிபுபடுத்தப்பட்ட ஒன்று எனவும் அது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விரைவான மறுதலிப்பை பாராட்டுவதாகவும் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றினூடாக இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை தன்னுடன் தொலை பேசியில் உரையாடியதாகவும் அந்த அறிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். 'த ஹிந்து' நாளிதழின் செய்திக்கு அமைய இந்தியாவின் RAW அமைப்பு தம்மை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக எவ்வித கருத்தையும் ஜனாதிபதி முன்வைக்கவில்லை எனவும் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை பாதிக்கும் நோக்கில் இந்த அறிக்கை திரிபுபடுத்தப்பட்ட ஒன்று எனவும் அவர் தன்னிடம் கூறியதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இதேவேளை, இந்த அறிக்கையை வௌியிட்ட 'த ஹிந்து' நாளிதழின் செய்திக்கு எதிராக இந்திய அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கை என்ன என்பது குறித்து தற்போது கேள்வி எழுந்துள்ளது. எவ்வாறாயினும், 'தி ஹிந்து' நாளிதழ் மற்றும் இலங்கையின் தற்போதைய பிரதமருக்கும் இடையில் மிக நீண்டகால நட்புறவு நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.