சந்தன பிரசாத்திற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி தொடர்ந்தும் விளக்கமறியலில்

by Staff Writer 18-10-2018 | 5:41 PM
Colombo (News 1st) கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை பதில் நீதவான், சட்டத்தரணி ஜயந்த டயஸ் நாணயக்கார முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வௌ்ளவத்தை பகுதியில் வாடகை வாகனம் ஒன்றை பயன்படுத்தி கடற்படையினரால் இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று மன்றுக்கு அறிவித்துள்ளனர். வழக்கின் பத்தாவது சந்தேகநபரான சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி குறித்த வாடகை வாகனத்தை பயன்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் லெப்டினன்ட் கமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சி மற்றும் சுமித் ரணசிங்க ஆகியோர் அடங்கிய குழு கடற்படையின் முன்னாள் கொமடோர் டீ.கே.பி. தசநாயக்கவின் வழிநடத்தலின் கீழ் செயற்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் கொழும்பின் அனைத்து பகுதிகளிலும் இந்த குழுவினர் சுற்றிவளைப்புகளில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, இளைஞர்களைக் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வேன், டீ.கே.பி தசநாயக்கவின் கண்காணிப்பின் கீழ் காணப்பட்டதாகவும் அறியக்கிடைத்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் குழு கொள்ளைச்சம்பவ விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, இன்ஸ்பெக்டர் நிஷாந்த டி சில்வா நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளார்.