கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி சைபர் தாக்குதல் இல்லை

இலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி சம்பவம் சைபர் தாக்குதல் இல்லை: தொழில்நுட்பப் பிரிவு அதிகாரி தகவல்

by Staff Writer 18-10-2018 | 8:37 PM
​Colombo (News 1st)  இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரிய நிதி மோசடித் தகவல்கள் உறுதியானதை அடுத்து அப்போதைய நிதிப் பிரிவு தலைவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தை தவிர்த்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதிப்பிரிவுத் தலைவரின் வாக்குமூலத்தைப் பெறுவதற்காக நுகேகொடையிலுள்ள அவரது இல்லத்திற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் பல தடவைகள் சென்றுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நிதிப்பிரிவுத் தலைவரின் இல்லத்திற்கு சென்ற சந்தர்ப்பங்களில் அங்கு எவரும் இருக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக பாராளுமன்றில் கருத்துத் தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் நிறுவனத் தலைவரான திலங்க சுமதிபால, இந்த சம்பவம் சைபர் தாக்குதலாக இருக்கலாம் என கூறினார். எனினும், அவ்வாறான சைபர் தாக்குதல் நடத்தப்படவில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தகவல் கட்டமைப்பின் செயற்பாடுகளை மேற்கொள்ளும் நம்பிக்கைக்குரிய சர்வதேச நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அது இரகசிய தகவல்களின் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவ்வாறான சைபர் தாக்குதல் நடத்தப்படவில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரி நதீஷான் சூரிய ஆரச்சி கூறினார்.