மலையகத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள்

சம்பள உயர்வு கோரி மலையகத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

by Staff Writer 17-10-2018 | 8:24 PM
Colombo (News 1st) சம்பள உயர்வு கோரி மலையகத்தின் பல பகுதிகளில் இன்றும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் இடம்பெற்றன. ரொசல்லை பகுதியில் சம்பள உயர்வு கோரி தோட்டத்தொழிலாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டவளை, மவுன்ஜீன், ஹய்ரீ, ரொசல்லை போன்ற தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை, ஹட்டன் வெலிஓயா தோட்ட மக்கள் வெலிஓயா தேயிலைத் தொழிற்சாலைக்கு முன்பாக சம்பள உயர்வு கோரி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர் பண்டாரவளை - கோணமுட்டாவை தோட்ட மக்களும் சம்பள உயர்வை வலியுறுத்தி இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர் தோட்ட முகாமையாளர் அலுவலகம் முன்பாக இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது. மேலும், இன்று பதுளை - கொழும்பு பிரதான வீதியில் ஹப்புத்தளை Y ‍ சந்திப் பகுதியில் ஹப்புத்தளை - காகொல்ல தோட்டத்தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஹப்புத்தளை, கல்கொல்லை, சர்வெட்டி போன்ற தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை, ஹப்புத்தளை நகர மத்தியில் 1000 ரூபா சம்பள உயர்வு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது கவனயீர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து தோட்டத்தொழிலாளர்கள் பதுளை நகரில் அமைந்துள்ள மாவட்ட தொழில் அலுவலகம் வரை பேரணியாகச் சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் சம்பள உயர்வு தொடர்பில் கலந்துரையாடிதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். அக்கரப்பத்தனை - பெல்மரல் லோவர் கிராண்டி கிளங்கன் தோட்ட மக்களும் சம்பள உயர்வு கோரி கவனயீர்பில் ஈடுபட்டனர். பெல்மரல் தோட்ட சந்தியில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது. நுவரெலியா - கொத்மலை, வெதமுல்லை, முறுக்கு ரம்பொடை தோட்டத்திலும் இன்று சம்பள உயர்வு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.