by Bella Dalima 17-10-2018 | 7:33 PM
சபரிமலையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, அதனை அண்மித்த நான்கு பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடையுத்தரவு ஐயப்ப பக்தர்களுக்குப் பொருந்தாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் சந்நிதானத்தின் நடை இன்று திறக்கப்பட்டு எதிர்வரும் 22 ஆம் திகதி சாத்தப்படவுள்ளது.
இந்த நிலையில், இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய அனுமதிக்கமைய, பெண்களும் சபரிமலைக்கு தரிசனம் செய்ய சென்றிருந்த போது நிலக்கல்லில் வைத்து ஆர்ப்பாட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அத்துடன், அவர்கள் 10 முதல் 50 வயதிற்குட்பட்ட பெண்களை அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் தடியடி நடத்தினர்.
இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் மோதல் வலுப்பெற்றது.
இதனையடுத்து நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் நூகு தெரிவித்துள்ளார்.
இதன் படி, குறித்த பகுதிகளில் நான்கு அல்லது ஐவருக்கு மேல் கூடி நிற்பது தடை செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் அனைவருக்கும் தமது அரசு பாதுகாப்பு வழங்கும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரடியாகப் பார்வையிட்டதன் பின்னர் அவர் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.