அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடையில் கலந்துரையாடல்

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடையில் கலந்துரையாடல்

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடையில் கலந்துரையாடல்

எழுத்தாளர் Staff Writer

17 Oct, 2018 | 8:16 pm

Colombo (News 1st) தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் அறிக்கையொன்று வௌியிடப்பட்டுள்ளது.

இன்றைய சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா , செல்வம் அடைக்கலநாதன், எம். ஏ. சுமந்திரன், எஸ்.சிவமோகன் மற்றும் க .கோடீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் ஜனாதிபதிக்கு 6 விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அரசியல் கைதிகளின் விடயம் சட்ட ரீதியாக மாத்திரம் பார்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல என்பதுடன், இது தமிழ் தேசியப் பிரச்சினையுடன் தொடர்புடைய விடயம் என்பதால், இது அரசியல் ரீதியாக எதிர்நோக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்து 9 வருடங்கள் கடந்துள்ள நிலையில், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் சிறையிலடைக்கப்பட்டுள்ளமை மனிதாபிமானமற்றது என்பதுடன், அப்பொழுதே அவர்களுக்கு தண்டனை வழங்கியிருந்தால் தற்போது தண்டனைக்காலம் நிறைவேறி விடுதலையாகியிருப்பார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கு புதிய சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதுடன், இப்புதிய சட்டத்தில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சாட்சியமாக முடியாது எனவும் இந்த சூழலில் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னைய அரசாங்கத்தின் தீர்மானத்தின் அடிப்படையில், அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய 12,000 போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில், தமிழ் அரசியல் கைதிகளைத் தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைத்திருப்பது நியாயமற்றது எனவும் இன்றைய சந்திப்பின் போது ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறைக்கைதிகள் சிறையில் உண்ணாவிரதம் இருந்து போராட்டங்களை நடத்தியமையும் தமது வேண்டுகோளுக்கு இணங்க அந்தப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டமையும் பொதுமக்களும், பல்கலைக்கழக மாணவர்களும் பலவிதப் போராட்டங்களை நடத்தி வருகின்றமையும் தமிழ் மக்களுடைய உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக ஜனாதிபதிக்கு தௌிவுபடுத்தப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதிகள் தமிழர்களாக இருக்கின்றமையே அவர்களது விடுதலை தொடர்பில் அரசின் கவனக்குறைபாட்டிற்குக் காரணமாக அமைந்துள்ளதாக தமிழ் மக்கள் கருதுவதாகவும் இது நல்லிணக்கத்திற்கு பாதகமானது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வலியுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றைக் கேட்டறிந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அடுத்த வாரமளவில் பிரதமர், சட்ட மா அதிபர் ஆகியோருடன் கலந்துரையாடி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்