அரசியல் கைதிகளுக்கு B அறிக்கை தாக்கல்

அனைத்து அரசியல் கைதிகளுக்கும் B அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது: ராஜித சேனாரத்ன

by Bella Dalima 17-10-2018 | 8:42 PM
Colombo (News 1st) சிறையில் உள்ள அனைத்து அரசியல் கைதிகளுக்கும் B அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்ததாவது,
தமிழ் கைதிகள் தொடர்பில் நான் பிரதமருடன் கலந்துரையாடினேன். அனைத்து கைதிகளுக்கும் எதிராக தற்போது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும், சுமார் 100 பேருக்கு இன்னும் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை.வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள கைதிகள் தொடர்பிலான வழக்கு விசாரணையின் பின்னரே அவர்களின் விடுதலை தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் எனக்குக் கூறினார். உதாரணத்திற்கு லக்ஷ்மன் கதிர்காமரின் கொலைச்சம்பவத்தின் குற்றவாளி தொடர்பில் ஒரு கொள்கை இருக்க வேண்டும் அல்லவா? அவ்வாறான பாரிய சம்பவங்களுடன் தொடர்புபடாதவர்களும் உள்ளனர். அவர்கள் தொடர்பிலும் ஆராய வேண்டும். இவர்கள் அனைவர் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொண்டதன் பின்னர் தற்போது 102 பேரே எஞ்சியுள்ளனர். அந்த 102 பேர் தொடர்பில் B அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆகக்குறைந்தது மன்னிப்பு வழங்க முடியுமா அல்லது வேறு ஏதேனும் நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது தொடர்பில் ஆராயப்படுகின்றது.