மலையக மக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம்

சம்பள உயர்வை வலியுறுத்தி மலையக மக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம்

by Staff Writer 16-10-2018 | 8:12 PM
Colombo (News 1st) முதலாளிமார் சம்மேளனத்துடனான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையும் நேற்று (15) தோல்வியடைந்த நிலையில், தமக்கான சம்பள உயர்வை வலியுறுத்தி மலையக மக்கள் இன்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். கொட்டகலை - எதன்சைட் தோட்ட மக்கள் சம்பள அதிகரிப்பு கோரி கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர் கொட்டகலை - எதன்சைட் மைதானத்திற்கு முன்பாக சுமார் 1 மணி நேரம் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. ஆயிரம் ரூபா சம்பளம் கோரி சுமார் 200-இற்கும் மேற்பட்ட தோட்டத்தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை, பத்தனை மௌவுட்வனன் தோட்ட மக்களும் சம்பள அதிகரிப்புக் கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மௌவுட்வனன் சந்தியில் கவனயீர்ப்பு போராட்டதில் ஈடுபட்டவர்கள் பின்னர் மௌவுட்வனன் தேயிலைத் தொழிற்சாலை வரை பேரணியாகச் சென்றனர். சுமார் ஒரு மணித்தியாலம் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.