இறக்குமதியைக் கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் பொருட்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

by Staff Writer 16-10-2018 | 6:41 PM
Colombo (News 1st) இறக்குமதியைக் கட்டுப்படுத்தக்கூடிய பொருட்கள் தொடர்பில் ஆராய்ந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதியமைச்சிற்கு உத்தரவிட்டுள்ளார். உலக சந்தையில் தற்போது உருவாகியுள்ள நிலையற்ற தன்மை காரணமாக நிகழ்காலத்தில் இலங்கை முகங்கொடுத்துள்ள பொருளாதார சவால்களை நிவர்த்திக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தேசிய பொருளாதார சபை இன்று கூடிய போது, ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் டொலரின் பெறுமதி அதிகரித்துள்ள பின்புலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காக இலங்கை முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதைத் தற்காலிகமாக மட்டுப்படுத்தி, தேசிய ரீதியில் உற்பத்தியை ஊக்குவிக்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பொலித்தீன் இறக்குமதியை மட்டுப்படுத்துவது தொடர்பிலும் தேசிய பொருளாதார சபை இன்றைய கலந்துரையாடலில் கவனம் செலுத்தியுள்ளது.