சர்வதேச ஒருநாள் போட்டி: குசல் விளையாடுவது சந்தேகம்

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குசல் ஜனித் பெரேரா விளையாடுவதில் சந்தேகம்

by Staff Writer 16-10-2018 | 9:44 AM
Colombo (News 1st) இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. குசல் ஜனித் பெரேரா பயிற்சிகளின்போது உபாதைக்குள்ளாகியுள்ளார். எனினும், இந்த விடயம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதுவரை எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை (17) பல்லேகலையில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குசல் ஜனித் பெரேரா உபாதைக்குள்ளாகியுள்ளார். இதனால், இன்று அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதோடு, குறித்த பரிசோதனை பெறுபேறுகளின்படியே நாளைய போட்டியில் அவர் விளையாடவுள்ளார். குசல் ஜனித் பெரேரா நாளைய போட்டியில் விளையாடாத பட்சத்தில், அவருக்குப் பதிலாக சதீர சரவிக்ரம இலங்கை அணியில் இணையவுள்ளார். இதனிடையே, மூன்றாவது போட்டிக்கான பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது, இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான லியன் ஜோசன்ட் உபாதைக்குள்ளாகியுள்ளார். இதனால், இலங்கை அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரில் அவர் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார். அவருக்குப் பதிலாக சகலதுறை வீரரான ஜோய் டென்லி அணியில் இடம்பெறுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான முதல் போட்டி மழை காரணமாக முடிவின்றி கைவிடப்பட்டது. இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் விதிமுறையில் இங்கிலாந்து 31 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன்படி, 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1 - 0 என்ற அடிப்படையில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான சகல போட்டிகளும் சிரச மற்றும் டிவி வன் தொலைக்காட்சிகளில் ​நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.