சி.வி.விக்னேஷ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தீர்ப்பு டிசம்பரில்

சி.வி.விக்னேஷ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தீர்ப்பு டிசம்பரில்

சி.வி.விக்னேஷ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தீர்ப்பு டிசம்பரில்

எழுத்தாளர் Staff Writer

16 Oct, 2018 | 5:41 pm

Colombo (News 1st) நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் முன்வைத்துள்ள அடிப்படை ஆட்சேபனை மனு தொடர்பிலான தீர்ப்பை எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி அறிவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

பா.டெனிஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கியமை தொடர்பில் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதை இடைநிறுத்தும் வகையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவினை நடைமுறைப்படுத்தாது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு அமைய, தம்மை மீண்டும் அமைச்சுப் பதவிக்கு நியமிக்காமல் சி.வி.விக்னேஷ்வரன் செயற்பட்டுள்ளமையினால், அவர் நீதிமன்றத்தை அவமதித்ததாக பா. டெனிஸ்வரன் முறைப்பாடு செய்திருந்தார்.

குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஜனத் சில்வா உள்ளிட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மாகாண முதலமைச்சர் என்ற வகையில், முதலமைச்சர் தமக்குள்ள அதிகாரத்திற்கிணங்க முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரனை அமைச்சுப்பதவியில் இருந்து நீக்கி, வர்த்தமானி அறிவித்தலை வௌியிட்டதாக சி.வி.விக்னேஷ்வரன் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.கணகேஸ்வரன் மன்றில் தெரிவித்தார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தலை மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைநிறுத்தியிருந்தாலும், முறைப்பாட்டாளரான பா.டெனிஸ்வரனை மீண்டும் அமைச்சுப்பதவிக்கு நியமிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளிக்கவில்லையென ஜனாதிபதி சட்டத்தரணி மன்றில் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, சி.வி.விக்னேஷ்வரனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடர முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.கணகேஸ்வரன் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்