100 ரூபா வேண்டாம் 1000 ரூபா வேண்டும் - ஆ.தொண்டமான்

'' அடிக்க அடிக்க அம்மியும் நகரும் '' - 100 ரூபா போதாது 1000 ரூபா வேண்டும் - ஆ.தொண்டமான்

by Staff Writer 15-10-2018 | 5:10 PM

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு

 தொடர்பிலான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி நிறைவுக்கு வந்துள்ளது.

முதலாளிமார் சம்மேளனம் 100 ரூபாய் சம்பள அதிகரிப்பிற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. எனினும், அதற்கு தாம் இணங்கப் போவதில்லை என அரசியல் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். இன்று மாலை ராஜகிரியவில் இடம்பெற்ற முதலாளிமார் சம்மேளனத்துடனான கலந்துரயைாடலின் பின்னர், அதில் கலந்துகொண்ட அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர், ஆறுமுகன் தொண்டமான், பிரதித் தலைவர் முத்துசிவலிங்கம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமாகிய வடிவேல் சுரேஷ் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர். இதனடிப்படையில், தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலான இன்றைய பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி நிறைவுக்கு வந்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஊடகங்களுக்கு தெரிவித்தார். '' அடிக்க அடிக்க அம்மியும் நகரும் '' என இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார். தொழிலாளர்களின் சம்பளத்தை 1,000 ரூபாவாக மாற்றியே தீருவோம் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார். எவ்வாறாயினும், தீபாவளிக்கு முன் சம்பள அதிகரிப்பு எனும் தமது கனவு நனவாகவில்லை என்பது தொடர்பில் தாம் கவலை கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். அழுத்தங்களூடாக சம்பள அதிகிரிப்பு என்பது சாத்தியமாகும் எனக் குறிப்பிட்ட அவர், ஆங்காங்கு இடம்பெறும் போராட்டங்கள் ஓரிடத்திற்கு கொண்டுவரப்பட்டு வலுவாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் கருத்து தெரிவித்தார். இந்நிலையில்,கொழுந்து பறிக்கும் அளவுக்கேற்ப சம்பளம் வழங்கப்படும் எனும் கோரிக்கையையும் தாம் நிராகரிப்பதாகவும் இதன்போது அரசியற் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

ஏனைய செய்திகள்