புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுப்புமுகாம்களிற்கு

நாட்டிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை தடுப்புமுகாம்களிற்கு அனுப்பவுள்ளதாக இத்தாலி தெரிவிப்பு

by Staff Writer 14-10-2018 | 10:39 AM
தமது நாட்டிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களைத் தடுப்பு முகாம்களிற்கு அனுப்பவுள்ளதாக இத்தாலி தெரிவித்துள்ளது. இத்தாலியிலுள்ள ரியாஸ் (Riace) நகரில் குடியேறிய புகலிடக் கோரிக்கையாளர்கள், இவ்வாறு ஏனைய முகாம்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக அந்நாட்டு உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த நகரிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இத்தாலி குடியுரிமையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில், நகர மேயர் டொமினிகோ லுகேனோவினால் (Domenico Lucano) திருமண ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடாளாவிய ரீதியில் பேசுபொருளாக மாறியுள்ள இந்த விடயம் தொடர்பிலான வாதப்பிரதிவாதங்கள் நிறைவடையும் வரை, நகர மேயர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தாலியில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில், வலுவான சில விதிமுறைகள் கொண்டுவரப்பட்டு சில மாதங்களின் பின்னர், நகர மேயர் கைது செய்யப்பட்டுள்ளார். மிம்மோ என்றழைக்கப்படும் குறித்த நகர மேயர், நாட்டுக்கு வருகைதரும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான நகரமாக கெலேப்ரியா (Calabria,) வை மாற்றியதுடன், அங்கு அவர்களுக்கு தற்காலிக வீடுகளையும் தொழிற் பயிற்சிகளையும் வழங்கினார். 1998 ஆம் ஆண்டளவில் அவரால் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டதுடன், இதனூடாக 2016 ஆம் ஆண்டளவில் உலகின் மிகவுயர்ந்த தலைவராகவும் சர்வதேச அளவில் பேசப்பட்டார். இந்நிலையில், நகர மேயர் டொமினிகோ லுகேனோ கைது செய்யப்பட்டமைக்கு எதிராக இத்தாலியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.