தீர்வை வரியற்ற வாகன இறக்குமதி - நவம்பரில் தீர்ப்பு

தீர்வை வரியற்ற வாகன இறக்குமதி - பாரிய மோசடி தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் வழக்குத் தீர்ப்பு நவம்பரில்

by Staff Writer 14-10-2018 | 7:18 PM

நாட்டின் நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் தீர்வை வரியற்ற வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் பாரிய மோசடி தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் வழக்கு தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

அரசியலமைப்பு தொடர்பான நிபுணத்துவம் பெற்ற சட்டத்தரணி மற்றும் சமூக செயற்பாட்டாளரான நாகானந்த கொடித்துவக்குவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தீர்வை வரியற்ற வாகன இறக்குமதி மோசடியின் காரணமாக, 16 பில்லியன் ரூபாவிற்கும் அதிக நட்டம் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், 2015ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற முறிகள் மோசடியால் அரசாங்கத்திற்கு 12 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடியாக மத்திய வங்கி முறிகள் மோசடி பதிவாகியுள்ளது. எனினும், தீர்வை வரியற்ற வாகன இறக்குமதிப் பத்திரத்தின் மூலம் 16 பில்லியன் ரூபாவை இலங்கை சுங்கம் இழந்துள்ளதாக சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு சுட்டிக்காட்டுகின்றார். 1675 சொகுசு வாகனங்களுக்கான கட்டணம் இலங்கையின் முகவர் நிறுவனம், ஜேர்மன் நிறுவனத்திற்கு ஏற்கனவே செலுத்தி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.