அம்பாறை வாவியில் அன்னப்பறவை படகுச்சேவை நிறுத்தம்

அம்பாறை வாவியில் அன்னப்பறவை படகுச்சேவையை நிறுத்துமாறு அறிவிப்பு

by Staff Writer 14-10-2018 | 1:06 PM
Colombo (News 1st) அம்பாறை வாவியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அன்னப்பறவை படகுச் சேவையை உடன் அமுலுக்குவரும் வகையில் நிறுத்துமாறு, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப் படகுச் சேவையை எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு முன்னர் நிறுத்துமாறு குறித்த திணைக்களத்தினால் அம்பாறை நகரசபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புக் கட்டளை சட்டத்தை மீறுயுள்ளதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி குறித்த படகு சேவை முன்னெடுக்கப்படுவதாக வனஜீவி திணைக்களத்தின் அம்பாறை மாவட்டத்தின் உதவிப் பணிப்பாளர் காமினி விக்கிரமதிலக குறிப்பிட்டுள்ளார். 17 ஆம் திகதிக்கு முன்னர் படகு சேவையை நிறுத்தாவிடின், அம்பாறை நகரசபைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த விடயம் குறித்து அம்பாறை நகரசபைத் தலைவர் சமிந்த சுகத்திடம் நியூஸ்பெஸ்ட் வினவிய போது, தயட்ட கிருள திட்டத்திற்கு இணையாக இந்தப் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டதாக அவர் கூறினார். படகு சேவையை நிறுத்துமாறு கடந்த சில தினங்களாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் கோரி வருவதாகவும் நகரசபை தலைவர் தெரிவித்தார். படகு சேவையினால் ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து தௌிவுபடுத்துமாறு தம்மால் எழுத்து மூலம் சமர்ப்பித்தபோதிலும், அதனை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தாகவும் கூறினார். இவ்வாறான நிலையில், வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குற்றஞ்சாட்டும் வகையில் படகு சேவையினால் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் அம்பாறை நகரசபை தலைவர் தெரிவித்தார். இதனால், படகு சேவை நிறுத்தப்படமாட்டாது எனவும் அம்பாறை நகரசபை தலைவர் சமிந்த சுகத் மேலும் குறிப்பிட்டார்.