ஹட்டன் - நோர்வூட் வீதி மூடப்பட்டுள்ளது

ஹட்டன் - நோர்வூட் வீதி மூடப்பட்டுள்ளது: சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

by Staff Writer 13-10-2018 | 8:11 PM
Colombo (News 1st) ஹட்டன் - மஸ்கெலியா, நோர்வூட் வீதியில் நியூவெலிகம பகுதியில் நிலம் தாழிறங்கியுள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீதி தற்போது மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் இந்த வீதிகளுக்கு பதிலாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில தினங்களாக நிலம் தாழிறங்குகின்றமை காரணமாக வீதியின் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள 6 வீடுகளிலிருந்து மக்கள் வௌியேற நேரிட்டது. இதேவேளை, களுத்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் வெல்லலவிட்ட, புலத்சிங்கள, அகலவத்த, மத்துகம, பாலின்தனுவர, இங்கிரிய மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மத்திய, ஊவா, தென் மற்றும் சப்ரகமுவ மகாணங்களில் 100 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் இடி மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.