புத்தளம் மாவட்ட மக்களின் போராட்டம் நீதியானது

புத்தளம் மாவட்ட மக்களின் போராட்டம் நீதியானது: பாலித்த ரங்கே பண்டார

by Bella Dalima 13-10-2018 | 7:00 PM
Colombo (News 1st) கொழும்பு குப்பைகளை புத்தளம் - அருவைக்காடு பகுதியில் கொட்டும் திட்டத்தைக் கைவிடுமாறு ​கோரி புத்தளத்தில் தொடர்ந்து சுழற்சி முறையிலான சத்தியாக்கிரக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கல்பிட்டி பிரதேச சபைக்கு முன்பாக மூன்றாவது நாளாக சுழற்சி முறையிலான சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கல்பிட்டி இளைஞர் அமைப்பினர் இதனை எற்பாடு செய்துள்ளனர். இதேவேளை, கொழும்பு முகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் இன்றுடன் 15 ஆவது நாளை எட்டியுள்ளது. புத்தளம் இளைஞர் அமைப்பு இதனை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அருவைக்காட்டில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளம் உதைபந்தாட்ட சம்மேளனம் இன்று பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது கறுப்பு தாரகையில் இருந்து புத்தளம் வரை பேரணியாக சென்று அங்கிருந்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபடுவர்களுக்கு தங்களின் ஆதரவினைத் தெரிவித்தனர். கழிவுப்பொருட்களை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் மாவட்ட மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக நீர்பாசனம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
முழு நாட்டின் குப்பைகளையும் புத்தளத்தில் கொட்டுகின்றார்கள் எனின், புத்தளம் மாவட்ட மக்களின் அர்ப்பணிப்பை கருத்திற்கொண்டு புத்தளத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இந்த திட்டத்தை முன்னெடுக்கும் போது, அரச அதிகாரிகள், தொண்டர் அமைப்புகள், மதத்தலைவர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்ட குழுவொன்றின் ஊடாக இந்த செயற்பாட்டை கண்காணிப்பதற்கான இணக்கப்பாட்டை அவர்கள் தெரிவித்தனர். எனினும், இன்று அவ்வாறான குழுவொன்றில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. அதனால் புத்தளம் மாவட்ட மக்களின் போராட்டம் நீதியான போராட்டமாகும்
என இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.