டக்வர்த் லூயிஸ் முறையில் இங்கிலாந்து வெற்றி

இலங்கைக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: டக்வர்த் லூயிஸ் முறையில் இங்கிலாந்து வெற்றி

by Staff Writer 13-10-2018 | 9:03 PM
Colombo (News 1st) இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டக்வர்த் லூயிஸ் விதிமுறையில் இங்கிலாந்து 31 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. தம்புளையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து சார்பாக ஜோ ரூட் 71 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஒய்ன் மொர்ன் 92 ஓட்டங்களையும் பெற்றனர். போட்டியில் 41 ஆவது ஓவரை வீசிய லசித் மாலிங்க நான்காவது பந்தில் ஒய்ன் மோர்கனையும், ஐந்தாவது பந்தில் மொயின் அலியையும் ஆட்டமிழக்கச் செய்து ஹெட்ரிக் வாய்ப்புப் பெற்றார். எனினும், கடைசி பந்து நோ பாலாக அமைய அவரால் ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 278 ஓட்டங்களைப் பெற்றது. பந்து வீச்சில் லசித் மாலிங்க 5 விக்கெட்களை கைப்பற்றினார். சர்வதேச ஒருநாள் அரங்கில் அவர் ஐந்து விக்கெட் பெறுதியை பதிவு செய்த எட்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். பதிலளித்தாடிய இலங்கை அணி 31 ஓட்டங்களுக்கு முதல் 4 விக்கெட்களையும் இழந்தது. உபுல் தரங்க ஓட்டமின்றிய நிலையிலும் , நிரோஷன் திக்வெல்ல 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து அணித்தலைவர் டினேஷ் சந்திமால் 6 ஓட்டங்களோடும் தசுன் ஷானக்க 9 ஓட்டங்களோடும் வெளியேறினர். குசல் ஜனித் பெரேரா 30 ஓட்டங்களைப் பெற்றார். ஆறாவது விக்கெட்டில் தனஞ்சய டி சில்வா மற்றும் திஸ்ஸர பெரேரா ஜோடி 66 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை சற்று உயர்த்தியது. இலங்கை அணி 29 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டது. 1 மணித்தியாலம் வரை மழை நீடித்ததால், போட்டியில் டக்வர்த் லூயிஸ் (Duckworth Lewis ) விதிமுறையில் இங்கிலாந்து அணி 31 ஓட்டங்களால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.