தேசிய விளையாட்டுவிழா: வடக்கு, மலையக வீரர்கள் சாதனை

44 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் பிரகாசிக்கும் மலையக மற்றும் வட மாகாண வீரர்கள்

by Staff Writer 12-10-2018 | 9:29 PM
Colombo (News 1st) 44 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் ஆடவருக்கான 10,000 மீட்டர் ஓட்டத்தில் மத்திய மாகாணத்தின் குமார் சண்முகேஸ்வரன் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார். மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்தின் ஹெரீனா ஜெயக்குமார் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். 44 ஆவது தேசிய விளையாட்டு விழா பொலன்னறுவை மாவட்ட மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. ஆடவருக்கான 10,000 மீட்டர் ஓட்டத்தை 30 நிமிடங்கள் 49 செக்கன்ட்களில் கடந்த ஹட்டன் - வெலிஓயா, புதுக்காடு பகுதியைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார். கடந்த வருடம் முதலிடம் பெற்ற மத்திய மாகாண வீரரான லயனல் சமரஜீவ 8 செக்கன்ட்கள் தாமதித்து வெள்ளிப்பதக்கத்தை அடைய, மற்றொரு மத்திய மாகாண வீரரான ஏ.ஜே.கே. பண்டார வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார். மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.2 மீட்டர் உயரத்திற்கு தாவிய சச்சினி கௌசல்யா தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 3 மீட்டர் உயரத்திற்கு தாவிய வட மாகாணத்தின் ஹெரீனா ஜெயக்குமார், மத்திய மாகாணத்தின் சீ.கே. கொடித்துவக்கு ஆகியோர் இரண்டாமிடத்தைப் பகிர்ந்துகொண்டனர். இந்தப் போட்டியில் தேசிய சாதனையாளரான அனிதா ஜெகதீஸ்வரன் உபாதை காரணமாக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.