நல்லாட்சி அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டும்: பசில்

நல்லாட்சி அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டும்: பசில் ராஜபக்ஸ

by Staff Writer 12-10-2018 | 8:59 PM
Colombo (News 1st) அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 14 ஆம் திகதிக்கு கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர ஒத்திவைத்தார். தொம்பே - மல்வான - மாபிடிகம பகுதியில் 16 ஏக்கர் காணியை கொள்வனவு செய்து, அங்கு வீடொன்றை நிர்மாணிப்பதற்கு அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக பிரதிவாதிகள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பிரதிவாதிகள் சார்பாக ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணிகள் இருவரும், பிரதம நீதியரசர் ஓய்வு பெறும் நிகழ்வில் கலந்துகொண்டமையால், வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதனைக் கருத்திற்கொண்ட நீதிபதி, அடுத்த மாதம் 14 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். இதன் போது, நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்த பசில் ராஜபக்ஸவிடம் ஊடகவியலாளர்கள் காபந்து அரசாங்கம் தொடர்பில் கேள்வி எழுப்பினர். அதற்கு, முதலில் நல்லாட்சி அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டும் எனவும் அதன் பின்னர் பார்க்கலாம் எனவும் பசில் ராஜபக்ஸ பதிலளித்தார்.