அமெரிக்கத் தடை முட்டுக்கட்டையாக இருக்காது: ரஷ்யா

இந்தியாவுடனான வர்த்தகத்திற்கு அமெரிக்கத் தடை முட்டுக்கட்டையாக இருக்காது: ரஷ்யத் தூதர்

by Bella Dalima 12-10-2018 | 5:04 PM
இந்தியா - ரஷ்யா இடையிலான வர்த்தக நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் தடை உத்தரவுகள் முட்டுக்கட்டையாக இருக்காது என ரஷ்யத் தூதர் நிகோலே குடசேவ் (Nikolay Kudashev) தெரிவித்துள்ளார். அதி நவீன போர்க் கப்பல்கள் மற்றும் ஆயுதங்களை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். S-400 டிரையம்ப் ரக ஏவுகணைகளை 40 ஆயிரம் கோடிரூபா செலவில் ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா சென்றிருந்தபோது அதுதொடர்பான உடன்படிக்கை கையெழுத்தானது. ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடையை அமெரிக்கா விதித்துள்ள நிலையில், இத்தகைய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டமை உலகளாவிய கவனம் பெற்றது. இந்தியா மீது அமெரிக்கா எத்தகைய நடவடிக்கையை எடுக்கப்போகிறது என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில், இந்தியாவுக்கான ரஷ்யத் தூதர் நிகோலே குடசேவ், இரு நாடுகளுக்கும் இடையிலான நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் உத்தரவுகள் முட்டுக்கட்டையாக இருக்காது என கூறியுள்ளார்.