பேரழிவை ஏற்படுத்தியுள்ள மைக்கேல் சூறாவளி

அமெரிக்காவில் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு அழிவை ஏற்படுத்தியுள்ள மைக்கேல் சூறாவளி

by Bella Dalima 12-10-2018 | 4:47 PM
அமெரிக்காவின் வட மேற்கு மாகாணமான புளோரிடாவில் புதன்கிழமை (10) பகலில் கரையைக் கடந்த மைக்கேல் சூறாவளி கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு அழிவை ஏற்படுத்தியுள்ளதாக அம்மாநில ஆளுநரான ரிக் ஸ்காட் தெரிவித்துள்ளார். மைக்கேல் சூறாவளி ஏற்படுத்திய பாதிப்பால் பல வீடுகள் அவற்றின் அடித்தளத்தில் இருந்து பிய்த்து எறியப்பட்டுள்ளன; எண்ணற்ற மரங்கள் சாலையில் விழுந்துள்ளன. மேலும், வீதிகளில் மின்சார இணைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இரவு முழுவதும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அமெரிக்க கடலோரக் காவல் படையினர் குறைந்தது 27 பேரைக் காப்பாற்றியுள்ளதாக ஆளுநர் ரிக் ஸ்காட் குறிப்பிட்டுள்ளார். மிகவும் சக்தி வாய்ந்த சூறாவளியான மைக்கேல் மேலும் நகர்ந்து அலபாமா மற்றும் ஜோர்ஜியா மாகாணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. புளோரிடாவில் வசித்து வந்த 3,70,000 பேருக்கும் அதிகமான மக்களை அவர்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறும், உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறும் முன்னதாக உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த எச்சரிக்கைகளைத் தாண்டியும் குறைந்த அளவு மக்களே தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மைக்கேல் சூறாவளி பாதிப்பால் இதுவரை 6 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நால்வர் புளோரிடாவிலும், ஜோர்ஜியா மற்றும் வடக்கு கரோலினா மாகாணங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.