அதிபரை முழந்தாளிட வைத்த முதலமைச்சர்: மனு விசாரணை

அதிபரை முழந்தாளிட வைத்த முதலமைச்சர்: அடிப்படை உரிமை மனு விசாரிக்கப்படவுள்ளது

by Staff Writer 11-10-2018 | 7:53 PM
​Colombo (News 1st) பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஆர்.பவானி தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. பாடசாலைக்கு மாணவி ஒருவரை அனுமதிக்காமை தொடர்பில் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தம்மை தூற்றி, முழந்தாளிட்டு, மனிப்புக்கோருமாறு அழுத்தம் பிரயோகித்தமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமையால் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடுமாறு கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் பதுளை வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் முன்னிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஆர்.பவானி தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும், பிரதிவாதியான ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை அல்லது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படாமையால் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர் கூறியுள்ளார். இந்த அடிப்படை உரிமை மனு இன்று உயர்நீதிமன்ற நீதியரசர்களான புவனெக்க அளுவிஹாரே, நலீன் பெரேரா மற்றும் விஜித் மலல்கொட ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.