ஹிருணிக்கா மீது நிதி மோசடிக் குற்றச்சாட்டு: உண்மையில் நடந்தது என்ன?

ஹிருணிக்கா மீது நிதி மோசடிக் குற்றச்சாட்டு: உண்மையில் நடந்தது என்ன?

ஹிருணிக்கா மீது நிதி மோசடிக் குற்றச்சாட்டு: உண்மையில் நடந்தது என்ன?

எழுத்தாளர் Bella Dalima

11 Oct, 2018 | 8:52 pm

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர மகநெகும திட்டத்திலிருந்து 2 கோடி ரூபாவை தவறான முறையில் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உண்மையில் நடந்தது என்ன?

இந்த விடயம் தொடர்பில் பல தகவல்கள் நியூஸ்ஃபெஸ்ட்டிற்குக் கிடைத்துள்ளன.

மகநெகும வீதி ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியர் நலன்புரி சங்கக் கணக்கிலிருந்து இரண்டு கோடி ரூபாவை ஹிருணிக்கா பிரேமச்சந்திர அரசியல் மற்றும் வேறு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியதாகத் தெரிவித்து செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக நேற்றும் இன்றும் சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

மகநெகும நலன்புரி சங்கத்தின் தலைவர் என கூறப்படுகின்ற ஜே.ஜே. விக்ரமரத்தின என்பவர் 2016 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் திகதி நிறுவனத்தின் பிரதி பொதுமுகாமையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

2014 – 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமது நலன்புரி நிதியத்தின் வருமானம் தொடர்பில் நடத்தப்பட்ட கணக்காய்வின்போது பிரச்சினை எழுந்துள்ளதால் சுயாதீன விசாரணை நடத்துமாறு இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்தக் கடிதத்தில் எந்தவொரு இடத்திலும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

இராஜகிரிய – நாவல வீதியிலுள்ள வைபத்திற்கு பொருட்களை வாடகைக்கு வழங்குகின்ற நிறுவனமொன்றுக்கு இந்த காலப்பகுதியில் 2,43,000 ரூபா செலுத்தப்பட்டமைக்கான பற்றுச்சீட்டுக்களிலேயே அவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, சுமார் இரண்டு கோடி ரூபா கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக வெளியாகும் செய்திகள் சந்தேகத்திற்கே வித்திடுகின்றன.

வைபத்திற்கான பொருட்கள் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவின் பேரில் கோரப்பட்டதாக பற்றுச்சீட்டுக்களில் தெரிவிக்கப்பட்டாலும், அவரது கையொப்பம் அல்லது அவர் இந்தக் கொடுக்கல் வாங்கலை அனுமதித்தமைக்கான குறிப்புகள் இந்தப் பற்றுச்சீட்டுக்களில் காணப்படவில்லை.

எவ்வாறாயினும், 2,43,000 ரூபாவை மகநெகும ஊழியர் நலன்புரி நிதியத்திலிருந்து பிரசன்ன குமார நிஸ்ஸங்க என்பவர் கையொப்பமிட்டுப் பெற்றுக்கொண்டுள்ளார்.

அவரது தேசிய அடையாள அட்டை இலக்கமும் இந்தக் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு கோடி ரூபா இந்த நிதியத்திலிருந்து வழங்கப்படவில்லை என்பதுடன், ஏழு பற்றுச்சீட்டுக்களுக்காக இரண்டு 2,43,000 ரூபா மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.

2,43,000 ரூபா தொடர்பில் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு நடத்தும் விசாரணை என்ன ?

நாட்டு மக்கள் அறிந்த வகையில், இத்தகைய கொடுக்கல் வாங்கல்கள் பெரும்பாலும் இணக்க சபையிலேயே தீர்க்கப்படுகின்றன.

இந்தப் பணத்தை ஹிருணிக்கா பிரேமச்சந்திர பெற்றுக்கொண்டமைக்கான சாட்சியங்கள் என்ன?

எவரேனும் ஒருவருடைய தேவைக்காக, ஹிருணிக்கா பிரேமச்சந்திரவின் அரசியல் எதிர்காலத்தை சீர்குலைக்கவா இந்த முயற்சி இடம்பெறுகின்றது?


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்