துமிந்த சில்வாவின் மரண தண்டனை உறுதியானது

துமிந்த சில்வா உள்ளிட்ட மூவரின் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது 

by Bella Dalima 11-10-2018 | 3:24 PM
Colombo (News 1st) பாரத லக்‌ஷ்மன் படுகொலை வழக்கில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் விதித்த மரண தண்டனையை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் தள்ளுபடி செய்து மரண தண்டனையை உறுதிப்படுத்தியது. 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி அங்கொடை, முல்லேரியா பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தொழிற்சங்க விவகார ஆலோசகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை சுட்டுக்கொலை செய்த குற்றத்திற்காக துமிந்த சில்வா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு மரண தடண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ​ இதற்கமைய, வழக்கின் 11 ஆவது பிரதிவாதியான துமிந்த சில்வா மூன்றாவது பிரதிவாதியான தெமட்டகொட சமிந்த மற்றும் 7 ஆவது பிரதிவாதி சரத் பண்டார ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. வழக்கின் முதலாவது பிரதிவாதியான பொலிஸ் கான்ஸ்டபிள் அனுர துஷார டி மெல்லை தண்டனையில் இருந்து விடுதலை செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.