மருத்துவபீட பீடாதிபதி உட்பட பல தலைவர்கள் இராஜினாமா

ரஜரட்ட பல்கலையின் மருத்துவபீட பீடாதிபதி உட்பட 14 பிரிவுகளின் தலைவர்கள் இராஜினாமா

by Staff Writer 10-10-2018 | 9:56 AM
Colombo (News 1st) ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி மற்றும் மேலும் 14 பிரிவுகளின் தலைவர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். இவர்களின் இராஜினாமாக் கடிதங்கள் நேற்று (09) மாலை தமக்குக் கிடைத்ததாக, ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர் ரஞ்சித் விஜேவர்தன தெரிவித்துள்ளார். மருத்துவ பீடத்தின் பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு எந்த முன்னறிவித்தலும் இன்றி கடந்த மாதத்தில் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் இந்தத் தீர்மானத்துக்கு வந்துள்ளனர். அநுராதபுரத்தில் உள்ள பின்னடைவான பகுதிகளுக்கு மருத்துவத் துறையுடன் தொடர்புடைய பேராசிரியர்கள் வருகை தராமை காரணமாக அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேராசிரியர் ஒருவருக்கு மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவும் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவருக்கு 80,000 ரூபாவும் விரிவுரையாளர் ஒருவருக்கு 60,000 ரூபாவும் கொடுப்பனவு வழங்குமாறு முன்னாள் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவினால் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டது. எனினும், குறித்த கொடுப்பனவு இதுவரை காலம் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுச் சபையின் அனுமதியின் பேரிலேயே வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்டாலும், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சின் அனுமதியின்றியே வழங்கப்பட்டதாக இது தொடர்பில் நாம் வினவியபோது, ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ரஞ்சித் விஜேவர்தன தெரிவித்தார். அமைச்சின் அனுமதியின்றி வழங்கப்படும் குறித்த கொடுப்பனவு நிறுத்தப்படுவதாக நிதியமைச்சு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வௌியிட்ட சுற்றுநிருபத்திற்கு இணங்க விரிவுரையாளர்களுக்கு ஊக்கமளிக்கும் கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதாக உபவேந்தர் தெரிவித்துள்ளார். குறித்த கொடுப்பனவை வழங்க அனுமதி வழங்குமாறு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.