மத்திய வங்கியின் ஆளுநரால் கூட பெற்றுக்கொள்ள முடியாத தகவல்களை மலிக் சமரவிக்ரம எவ்வாறு பெற்றுக்கொண்டார்?

மத்திய வங்கியின் ஆளுநரால் கூட பெற்றுக்கொள்ள முடியாத தகவல்களை மலிக் சமரவிக்ரம எவ்வாறு பெற்றுக்கொண்டார்?

மத்திய வங்கியின் ஆளுநரால் கூட பெற்றுக்கொள்ள முடியாத தகவல்களை மலிக் சமரவிக்ரம எவ்வாறு பெற்றுக்கொண்டார்?

எழுத்தாளர் Staff Writer

10 Oct, 2018 | 9:17 pm

Colombo (News 1st) சமூக வலைத்தளங்களிலும் சில இலத்திரனியல் ஊடகங்களிலும் தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுவதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம பாராளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஊடக நிறுவனமொன்று கடந்த வாரம் எனது வங்கிக்கணக்கில் 150 பில்லியன் அதாவது 14,500 இலட்சம் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி அந்தப் பணத்தை முடக்கியதாகவும் செய்தி வெளியிட்டது. இது மற்றுமொரு பொய்க்குற்றச்சாட்டாகும். நான் இது தொடர்பில் மத்திய வங்கியிடம் வினவினேன். இத்தகைய பணம் எந்தவொரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரின் வங்கிக் கணக்கிலும் வைப்பிலிடுவதற்காகக் கிடைக்கவில்லை என அவர்கள் கூறினர். இது முற்றுமுழுதான பொய்க்குற்றச்சாட்டாகும். பிரதி சபாநாயகர் அவர்களே, இதுவா எமக்குத் தேவையான ஊடக சுதந்திரம்?

என கேள்வி எழுப்பினார்.

1500 இலட்சம் வைப்பிலிடப்பட்ட வங்கிக்கணக்கு தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் மத்திய வங்கியின் ஆளுநரிடம் வினவியபோது, அவர் அது தொடர்பான தகவலை தனக்குக் கூட வழங்க மாட்டார்கள் என தெரிவித்தார்.

நிதி தொடர்பில் ஆராயும் புலனாய்வுக்குழு மத்திய வங்கியில் இருந்த போதிலும், அது பூரண சுதந்திரத்துடனேயே செயற்படுகின்றது. அவர்கள் விசாரணைகளை மேற்கொள்வார்கள். அது தொடர்பில் எனக்கும் தெரியாது. சந்தேகத்திற்கிடமான பரிமாற்றங்கள் தொடர்பில் எனக்குத் தெரியாது. நிதி மோசடி மற்றும் எதிர்ப்பு நிதியளிப்பு தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக மத்திய வங்கியின் ஆளுநரே காணப்படுகின்றார். எனினும், இதில் தலையீடு செய்ய முடியாது. சட்டத்தில் நடைமுறையொன்றுள்ளது. அதன் கீழ் யார் வைப்பிலிட்டது, யாருடையது என்பதை எம்மால் அறிய முடியாது. அங்கு சேவையாற்றும் அதிகாரிகள் அறிந்திருப்பார்கள். சட்டத்திற்கு அமைய அது தொடர்பில் வெளிக்கொணர முடியாது.

என மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.

மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவின் தலைவரான மத்திய வங்கியின் ஆளுநருக்குக் கூட பெற்றுக்கொள்ள முடியாத தகவல்களை அமைச்சர் மலிக் சமரவிக்ரம எவ்வாறு பெற்றுக்கொண்டார்?

மத்திய வங்கியின் செயற்பாடுகளில் இந்தளவு தலையீடு செய்ய முடியுமாயின், முறிகள் மோசடியில் உங்கள் தலையீடு குறித்து மக்கள் அறிந்துகொள்வது அவ்வளவு கடினமாகாது.

எந்தவொரு அமைச்சுப்பதவியுமின்றி கட்சியின் தவிசாளராக இருந்து 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி 26 ஆம் திகதி காலையில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று, அடுத்த நாள் நடைபெறவிருந்த முறிகள் ஏலத்திற்கு மலிக் சமரவிக்ரம விடுத்த அழுத்தத்தை உணர்வதற்கு ஒரு அமைச்சராக இன்று அவர் பாராளுமன்றத்தில் ஆழ்த்திய உரையே சான்று பகர்கின்றது.

1500 இலட்சம் ரூபா வைப்பிலிடப்பட்டதாகக் கூறப்படும் வங்கிக் கணக்கு தொடர்பில் எவரும் உரிய தகவல்களை அம்பலப்படுத்தாமைக்கான காரணம் யாது?

இந்தக் கணக்கினை மூடுவதற்கு இல்லையேல் ஆவணங்களை கணனிக் கட்டமைப்பில் இருந்து நீக்குவதற்கு அல்லது தகவல்களைக் காணாமற்போகச் செய்வதற்கு இந்த கால அவகாசம் போதுமானதாகும்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் போட்டி ஒளிபரப்பு நிதியத்திற்கு கிடைக்க வேண்டிய 5 மில்லியன் டொலரை சிங்கப்பூரில் வங்கிக் கணக்கொன்றில் வைப்பிலிட முயன்றதாகக் கூறப்படும் சம்பவமும் முக்கியமானதாகும்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பில் விசாரணை செய்வதற்கு காலம் தாழ்த்தியதால், அதனை சாதகமாக்கிக் கொண்டவர்கள் இந்த மோசடி தொடர்பான சாட்சியங்களை அழித்தனர்.

இறுதியில் ”கம்ப்யூட்டர் ஜில்மார்ட்” என்ற பெயரில் இந்த சம்பவத்தைக் குறைத்து மதிப்பிடும் நிலையை ஏற்படுத்தினர்.

ஹொங்கொங்கில் 22 மில்லியன் டொலர் வைப்பிலிடப்பட்ட வங்கிக் கணக்கு தொடர்பான விசாரணையின் போது பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு பின்பற்றிய அசமந்தப் போக்கை ஊழலுக்கு எதிரான அமைப்பு கடந்த வாரம் கேள்விக்குட்படுத்தியது.

இந்த எல்லா விடயங்களும் இறுதியில் மர்மக் கொடுக்கல் வாங்கல்களாக மாற்றப்பட்டுள்ளன.

ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தப்பிச்செல்லும் அமைச்சர் மலிக் சமரவிக்ரம பாராளுமன்ற சிறப்புரிமைகளுக்குள் மறைந்து, குற்றச்சாட்டுகளை மூடி மறைப்பதற்கு முயல்கின்றார்.

எனினும், உண்மை ஒன்றன் பின் ஒன்றாக அம்பலமாகப் போகின்றது.

உங்கள் சொத்துகள் விரைவில் மக்கள் முன் வெளிக்கொணரப்படவுள்ளதை தடுக்க முடியாது.

ஊடக சுதந்திரம் தொடர்பிலும் நீங்கள் இன்று கருத்து வெளியிட்டீர்கள்

இவ்வளவு ஊடக சுதந்திரம் இருந்தும், இந்தளவு தகவல்களை அம்பலப்படுத்தியும் ஊழல் சற்றும் குறைந்தாகத் தெரியவில்லை.

காலம் கடத்துவதும் மூடி மறைப்பதும் தப்பியோடுவதுமே உங்கள் வழிமுறை என்பதை நாட்டு மக்கள் நன்கறிவர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்