பாதிக்கப்பட்டவர்களைத் தேடி மக்கள் சக்தி பயணம் 

வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தேடிப் பயணித்த மக்கள் சக்தி குழுவினர்

by Staff Writer 09-10-2018 | 8:57 PM
Colombo (News 1st)  நாட்டின் வணிகத் தலைநகரமான கொழும்பில் பாரியளவிலான கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன், பல திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், நகரிலுள்ள சில வீதிகளில் பயணிக்கும் போது அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களைத் தேடி மக்கள் சக்தி குழுவினர் இன்று பயணித்தனர். தெமட்டகொடை - மஹவில சமந்தா தோட்டத்தில் 60 குடும்பங்களுக்கும் அதிக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பலத்த மழையை அடுத்து அவர்களின் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. சமந்தா தோட்டத்திற்கு அருகிலுள்ள ஹீன் கால்வாய் சிறிது காலமாக புனரமைக்கப்படாமையால், மழை நீர் வடிந்தோடாமல் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டினர். நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இந்த மக்கள் செல்வதற்கு பாதுகாப்பான இடமொன்று இல்லாத காரணத்தினால், நீர் நிரம்பியுள்ள வீடுகளிலேயே வசிக்க வேண்டிய நிலையை எதிர்நோக்கியுள்ளனர். பாடசாலை மாணவர்களின் கல்வி செயற்பாடுகளும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளன. சமந்தா தோட்டத்திலுள்ள 60 குடும்பங்களும் பயன்படுத்தும் மலசலக்கூடங்கள் இரண்டும் தற்போது பெருக்கெடுத்துள்ளன. தமக்கு தகுந்த இடமொன்றில் வீடுகளை வழங்குவதாக இருந்தால், அங்கிருந்து வெளியேறுவதாக மக்கள் கூறினர். இதேவேளை, கொதடுவ எலஹேன வீதியின் பொன்சேகா தோட்டத்திற்கும் நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் விஜயம் செய்திருந்தனர். 10 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், முறையற்ற அபிவிருத்தியினால் இந்தத் தோட்டத்தின் எல்லையிலுள்ள கால்வாய் பெருக்கெடுத்துள்ளது. புளுமெண்டல் 478 / 2 தோட்டத்தில் 25 குடும்பங்களுக்கும் அதிகமானோர் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை நீரை உரிய முறையில் வெளியேற்றுவதற்கான முறையொன்று காணப்படாமையினால் இந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.