பாராளுமன்ற நுழைவாயிலில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

வாழ்க்கைச் செலவிற்கு ஏற்ற ஓய்வூதியத்தை வழங்குமாறு கோரி பாராளுமன்ற நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம்

by Staff Writer 09-10-2018 | 9:54 PM
Colombo (News 1st) வாழ்க்கைச் செலவிற்கு ஏற்ற ஓய்வூதியத்தை வழங்குமாறு கோரி, அகில இலங்கை அரச ஓய்வூதியம் பெறுபவர்களின் ஒன்றிணைந்த தேசிய அமைப்பு பாராளுமன்ற நுழைவாயிலில் இன்று எதிர்ப்பில் ஈடுபட்டனர். அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற சிலர் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்றிருந்தனர். இதனால் பத்தரமுல்லை பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகிலுள்ள பிரதான வீதியில் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த எதிர்ப்பு நடவடிக்கை சுமார் 3 மணித்தியாலங்கள் இடம்பெற்றதுடன், எதிர்ப்பில் ஈடுபட்டவர்களில் ஐவருக்கு பிரதி சபாநாயகரை சந்திக்க பொலிஸார் வாய்ப்பளித்ததாக அகில இலங்கை அரச ஓய்வூதியம் பெறுபவர்களின் ஒன்றிணைந்த தேசிய அமைப்பின் பிரதம செயலாளர் யூ.எச்.லியனகே கூறினார். அவர்களின் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை பிரதி சபாநாயகர் பெற்றுக்கொண்டதுடன், அதனை சபாநாயகரிடம் கையளிப்பதாகவும் பிரதி சபாநாயகர் வாக்குறுதி வழங்கியதாக அவர் தெரிவித்தார். வாழ்க்கைச் செலவிற்கு ஏற்ற வகையில் ஓய்வூதிய சம்பளம் கோரப்படுகின்ற நிலையில், ஓய்வூதியக் காலத்தை இலகுவாக செலவிடுவதற்கான ஊழியர் சேமலாப நிதியம் கடந்த காலப்பகுதிகளில் பல்வேறு முதலீடுகளுக்கு முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டது. முறிகள் மோசடி காரணமாக ஊழியர் சேமலாப நிதியத்திற்கு 1800 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டது. 2008 - 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பங்குச்சந்தையில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் காரணமாக 2800 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாகத் தெரிவித்து தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் நீதிமன்றத்தை நாடியது. ஊழியர் சேமலாப நிதியம் பங்குச்சந்தையில் மேற்கொண்ட சில முதலீடுகள் காரணமாக எவ்வித இலாபமும் கிடைக்கவில்லை என ஸ்ரீலங்கன் விமான சேவை தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அண்மையில் வெளிக்கொணரப்பட்டது. கார்கில்ஸ் வங்கியில் 495 மில்லியன் ரூபாவும், கென்வில் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட 5 பில்லியன் ரூபாவும் அதில் அடங்குகின்றது. சட்டங்களை மீறி ஸ்ரீலங்கன் விமான சேவையில் 500 மில்லியன் ரூபாவை 2010 ஆம் ஆண்டு ஊழியர் சேமலாப நிதியம் முதலீடு செய்துள்ளமையும் ஆணைக்குழுவில் வெளிக்கொணரப்பட்டது.