நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் அவ்வப்போது திறப்பு

பலத்த மழை நீடிக்கும்: நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் அவ்வப்போது திறக்கப்படுகின்றன

by Staff Writer 09-10-2018 | 8:50 PM
Colombo (News 1st) பலத்த மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வறட்சியினால் சில போகங்கள் பயிர்செய்கையில் ஈடுபட முடியாது பாதிக்கப்பட்டிருந்த ரஜரட்ட பகுதியில் தற்போது மழை பெய்து வருகின்றது. ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் திறக்கப்பட்ட 6 வான்கதவுகளும் இன்று காலை மூடப்பட்டன. அநுராதபுரம் புண்ணிய பூமிக்குள் பிரவேசிக்கும் மல்வத்து ஓயா குறுக்கு வீதி பாலம் நீரில் மூழ்கியுள்ளமையால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் 4 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதுடன், அதிலிருந்து வெளியேறும் நீர் கலா ஓயாவை சென்றடைகின்றது. மரதன்கடவல - மாமினியாவ குளம், ரம்பேவ குளம், கடஹத குளம் மற்றும் கெக்கிராவை மாமான்கடவல குளம் ஆகியவற்றின் வான் கதவுகள் இன்று பிற்பகல் திறக்கப்பட்டுள்ளன. மகாவலி கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையால், வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவதற்கு பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் இடைக்கிடையே திறக்கப்பட்ட வண்ணமுள்ளன. இதேவேளை, பலத்த மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சீஷெல்ஸுக்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிற்கு தொலைபேசியூடாக இது தொடர்பில் ஆலோசனை வழங்கியுள்ளார். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் போது நிதியொதுக்கீடுகள் தொடர்பில் பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி அவரிடம் கூறியுள்ளார். மழை வௌ்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு முப்படையினரின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளுமாறு பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.     சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு