நாட்டின் பல பகுதிகளில் இன்றும் கடும் மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் கடும் மழை

by Staff Writer 09-10-2018 | 6:57 AM
Colombo (News 1st) வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் தோன்றியிருந்த குழப்பநிலை, தாழமுக்கமாக மாறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், நாடு முழுவதும் இன்றும் நாளையும் கடும் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்களில் 150 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் என வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். கடும் மழை காரணமாக, களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, அகலவத்த, மத்துகம, பதுரலிய, இங்கிரிய ஆகிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், காலி, கேகாலை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த முதலாம் திகதி முதல் பெய்துவரும் கடும் மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த நால்வரும் காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தலா இருவரும் கேகாலை மாவட்டத்தில் ஒருவரும் அடங்குவதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், 48,918 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5,835 ​பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை, மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் 35 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. அத்தோடு, 1,668 க்கும் அதிக வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.