சர்வதேச நாணய நிதியத்திடம் இனி கடன் பெறப்போவதில்லை

சர்வதேச நாணய நிதியத்திடம் இனி கடன் பெறப்போவதில்லை: துருக்கி ஜனாதிபதி தீர்மானம்

by Staff Writer 09-10-2018 | 9:22 PM
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தமது நாடு இனி கடன்களைப் பெறாது என துருக்கி ஜனாதிபதி ரிசெப் தயிப் எர்டோகன் (Recep Tayyip Erdoğan) தெரிவித்துள்ளார். நாட்டின் நன்மை கருதி துருக்கியில் சர்வதேச நாணய நிதியத்தின் கதையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக எர்டோகன் தனது கட்சியினருக்கு அறிவித்துள்ளார். துருக்கியின் பொருளாதார நிலையை ஒவ்வொரு காலாண்டிலும் மதிப்பிடுவதற்காக மெக்கின்சி எனப்படும் சர்வதேச ஆலோசனை நிறுவனத்திடமிருந்து அரசாங்கம் சேவையைப் பெற்றுள்ளதாக அந்நாட்டு எதிர்க்கட்சி கடந்த வாரத்தில் எர்டோகனின் அரசாங்கத்தை விமர்சித்திருந்தது. மத்திய வங்கியின் 24 வீதம் வரை பணவீக்கம் காணப்படும் நிலையில், துருக்கியின் லிரா நாணயம் இந்த வருடத்தில் 40 வீதம் வரையில் பெறுமதி குறைவடைந்துள்ளது. அத்துடன், மிகக்குறைந்த கடன்களுடன் துருக்கி காணப்படுகின்றது. துருக்கியின் 28 வீத பொதுப்பணி கடன்களும் 16 வீத வீட்டுத்திட்ட கடன்களும் அபிவிருத்தியடைந்து வரும் நாடொன்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் அரைவாசி விகிதமாகக் காணப்படுகின்றது. பெயரளவில் அதிகூடிய மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் 17 ஆவது இடத்திலும் கொள்முதல் ஆற்றல் சமநிலையைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் 13 ஆவது இடத்திலும் துருக்கி உள்ளது. அத்துடன், உலகின் முன்னணி விவசாய உற்பத்திகள், புடவை, மோட்டார் வாகனங்கள், போக்குவரத்து சாதனங்கள், நிர்மாணத் தளபாடங்கள், நுகர்வுக்கான மின்னியல் சாதனங்கள் மற்றும் வீட்டு உபகரணங்களை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் துருக்கி இடம்பெற்றுள்ளது.