பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிவு

கூட்டு ஒப்பந்தம் தொடர்பான இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி முடிவு

by Staff Writer 09-10-2018 | 8:20 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் இன்று நடைபெற்ற இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி முடிவடைந்தது. இன்றைய பேச்சுவார்த்தையின் போது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாள் சம்பளமாக 575 ரூபாவை வழங்க முடியும் என முதலாளிமார் சம்மேளனம் அறிவித்த நிலையில், தொழிற்சங்கங்கள் அதனை ஏற்க மறுத்துவிட்டன. இராஜகிரியவில் உள்ள முதலாளிமார் சம்மேளன அலுவலகத்தில் இன்று பிற்பகல் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை நிர்ணயிக்கும் கூட்டு ஒப்பந்தம் இன்னும் நான்கு நாட்களில் காலாவதியாகவுள்ள நிலையில், இன்றைய பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற மூன்று தொழிற்சங்கங்களினதும் பிரதிநிதிகள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்தின் அதிகாரிகள் இந்தப் ​பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்தனர். பேச்சுவார்த்தை சுமார் 40 நிமிடங்கள் நீடித்த நிலையில், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் வௌியேறி தனியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஒருசில நிமிடங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தொழிசங்கப் பிரதிநிதிகள் பின்னர் அங்கிருந்து வௌியேறினர். எவ்வாறாயினும், தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.