ஒலுவில் மீனவர்களும் பிரதேசமக்களும் தொடர் போராட்டம்

ஒலுவில் துறைமுகப் பிரச்சினை: மீனவர்களும் பிரதேச மக்களும் தொடர்ந்து கவனயீர்ப்புப் போராட்டம்

by Staff Writer 09-10-2018 | 8:39 PM
Colombo (News 1st) ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் கடல் முகப்புப் பகுதியில் மணல் மூடியுள்ளமை தொடர்பில் இன்றும் இருவேறு கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் கடல் முகப்புப் பகுதியில் மூடியுள்ள மணலை அகற்ற வலிறுயுத்தி மீனவர்கள் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஐந்தாவது நாளாக இன்றும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். பிரதேச செயலகத்திற்கு முன்பாக படகுகளை நிறுத்தி வைத்து, கூடாரம் அமைத்து மீனவர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கவனயீர்ப்பில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் தமக்கான உணவை அங்கேயே சமைத்து உண்பதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் கூறினார். ஒலுவில் துறைமுகத்தின் கடல் முகப்புப் பகுதியில் மணல் மூடியுள்ளதால் கடற்றொழிலுக்குச் சென்ற படகுகளை கரைக்குக் கொண்டு வருவதில் மீனவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கினர். இதன் காரணமாக, தமது செலவில் பெக்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி மணலை அகற்றுவதற்கான முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டனர் இந்த நிலையில், ஒலுவில் துறைமுக நுழைவாயில் பகுதியில் பிரதேச மக்கள் நான்காவது நாளாக இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். ஒலுவில் துறைமுகத்தின் கடல் முகப்புப் பகுதியில் மூடியுள்ள மணலை அகற்றக்கூடாது என வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. மணல் அகற்றப்படும் பட்சத்தில் கடலரிப்பு மேலும் உக்கிரமடையும் சாத்தியமுள்ளதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டினர்.