யாழ். பல்கலை மாணவர்கள் விழிப்புணர்வு நடைபவனி

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விழிப்புணர்வு நடைபவனி

by Staff Writer 09-10-2018 | 8:29 PM
 Colombo (News 1st) அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரியும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விழிப்புணர்வு நடைபவனியை ஆரம்பித்துள்ளனர். யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற வழிபாடுகளையடுத்து, நடைபவனி ஆரம்பமானது. பலாலி வீதியூடாக யாழ். நகரை சென்றடைந்த நடைபவனி, ஏ9 வீதியூடாக பயணித்து அநுராதபுரத்தை சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடைபவனிக்கு ஆதரவு தெரிவித்து, யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவப் பிரிவு மாணவர்கள் இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். யாழ். கைடிதயில் அமைந்துள்ள சித்த மருத்துவப் பிரிவு மாணவர்கள் சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். வீதிகளின் இருமருங்கிலிருந்தும் தமது ஆதரவைத் தெரிவித்த மாணவர்கள், பேரணியுடனும் இணைந்து கொண்டிருந்தனர். நடைபவனி சாவகச்சேரியை அண்மித்தபோது சாவகச்சேரி நகரசபை தவிசாளர் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் நடைபவனியுடன் இணைந்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், யாழ். பல்கலைக்கழக முன்னாள் மாணவர் தலைவருமான செல்வராசா கஜேந்திரனும் இதில் கலந்துகொண்டிருந்தார். யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பமான இந்த நடைபவனி, இன்று மாலை கொடிகாமம் நகரை சென்றடைந்தது. அநுராதபுரம் வரை முன்னெடுக்கப்படவுள்ள இந்த விழிப்புணர்வு நடைபவனியின் இன்றைய பயணம் கிளிநொச்சியில் நிறைவடைந்தது.