வௌ்ளத்தில் வணாத்தமுல்லை - நியூஸ்பெஸ்ட் உடன் விஜயம்

வௌ்ளத்தில் சிக்கிய பொரளை மக்களை பார்க்கச்சென்ற நியூஸ்பெஸ்ட் மக்கள் சக்தி குழுவினர்

by Staff Writer 08-10-2018 | 7:39 PM

இன்று பெய்த கடும் மழை காரணமாக பொரளை - வணாத்தமுல்லை பகுதி நீரில் மூழ்கியது.

இதனால் 496 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொரளை - வணாத்தமுல்ல பகுதி நீரில் மூழ்கி 12 மணித்தியாலங்கள் நிறைவடைய முன்னர், அதற்கான விஞ்ஞான ரீதியான தீர்வைக்காணும் பொருட்டு நியூஸ்பெஸ்ட் மக்கள் சக்தி குழுவினர் இன்று அவர்களைச் தேடிச்சென்றனர். வானிலையில் ஏற்படும் மாற்றத்துடன், இன்று பெய்த கடும் மழை காரணமாக கொழும்பு நகரின் சில பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கின. இதேவேளை, ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டபோதிலும், அதற்கான உரிய தீர்வு வழங்கப்படவில்லை. கொழும்பு நகர் பகுதியில் இன்று ஓரளவு மழை பெய்தபோதிலும், சில பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியது ஏன்? இதற்கான காரணத்தை ஆராயும் நோக்குடன், மழையையும் பொருட்படுத்தாது, கொழும்பின் சில பகுதிகளில் நியூஸ்பெஸ்ட் மக்கள் சக்தி குழுவினர் இன்று கள ஆய்வில் ஈடுபட்டனர். இந்த விஞ்ஞானபூர்வ ஆய்வில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் நகர மற்றும் கிராம நிர்மான துறை மாணவர்களும் கலந்துகொண்டனர். ஹல்கஹவத்த கிராமத்தின் எல்லைப்பகுதியில் ஓடும் ஹீன் கால்வாய் பெருக்கெடுப்பதால் இந்த கிராமம் அடிக்கடி நீரில் மூழ்குகின்றது. ஒருகொடவத்த பகுதியூடாக களனி ஆற்றை சென்றடையும் ஹீன் கால்வாயில் கழிவுகள் கொட்டப்படுவதே வெள்ளம் ஏற்படுவதற்கு பிரதான காரணம் என்பது இன்று கண்டறியப்பட்டது. இந்த பகுதி வருடத்திற்கு 3 தடவைகள் வெள்ளத்தில் மூழ்குகின்றது. இதன்காரணமாக இந்த பகுதியிலுள்ள சிறார்கள் நோய்வாய்ப்படுவதாக கிராம மக்கள் குறிப்பிடுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வணாத்துமுல்ல எம்.எம். பெரேரா சனசமூக நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பான இடத்தில் தங்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுத்தால் இங்கிருந்து வெளியேறுவதற்கு தாம் தயார் என பாதிக்கப்பட்டுள்ள 496 குடும்பங்களை சேர்ந்தவர்களும் குறிப்பிடுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் பல சிறார்களும் காணப்படுகின்றனர். நாளையும் இந்த கள ஆய்வு தொடரும்...