3500 குடும்பங்களுக்கான மின்சார விநியோகம் தடை

மழையுடனான வானிலை: 3500 குடும்பங்களுக்கான மின்சார விநியோகம் தடை

by Staff Writer 07-10-2018 | 10:04 AM
Colombo (News 1st) நிலவும் மழையுடனான வானிலையால் பல பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக, எரிசக்தி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. களுத்துறை, பதுரலிய, மதுகம, அஹலவத்த ஆகிய பகுதிகளில் 3,500 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. அத்துடன், பேராதனை, கடுகன்னாவ, கலஹா, கலகெதர பகுதிகளில் 750 வீடுகளுக்குமான மின்சார விநியோகமும் தடைப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கடும் மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்தார். பாராளுமன்ற சுற்றுவட்டத்தை அண்மித்த பகுதியில் 60 இராணுவத்தினரும், காலி, பிடிகல, உடுகம, யக்கலமுல்ல பகுதிகளில் 40 இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, வெலிபென்ன, மதுகம பகுதிகளில் நிவாரணங்களை வழங்குவதற்காக 85 இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் நிவாரணங்களை வழங்குவதற்கான கடற்படையினரை அனுப்பிவைத்துள்ளதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் தினேஷ் பண்டார குறிப்பிட்டுள்ளார்.