நிதி நிறுவனங்களை ஒழுங்குப்படுத்தல் தொடரும் - ம.வ

நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தல் தொடரும் - மத்தியவங்கி

by Staff Writer 07-10-2018 | 6:23 PM

நாட்டின் நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை மத்தியவங்கி தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் இரண்டு நிதி நிறுவனங்களின்அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு மத்தியவங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக, மத்தியவங்கியை மேற்கோள்காட்டி 'சண்டே டைம்ஸ்' பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. CIFL நிதி நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் இந்த வருடம் மார்ச் மாதம் இரத்து செய்யப்பட்டதாக, மத்தியவங்கியின் தகவலை அடிப்படையாகக்கொண்டு சண்டே டைம்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. TSCFL எனப்படும் ஸ்டேன்டர்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் அனுமதிப்பத்திரத்தை கடந்த ஜூலை மாதத்தில் மத்திய வங்கி இரத்து செய்துள்ளது. அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்ட 2 நிதி நிறுவனங்களில் மட்டும் 7,000 முதலீட்டாளர்களினால், 6.1 பில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது. இலங்கை முதலீட்டு காப்புறுதி மற்றும் உதவித் திட்டத்திற்கமைய, முதலீட்டாளர் ஒருவருக்கு கூடியபட்சம், 6 இலட்சம் ரூபா வரையில் நட்டஈடு செலுத்துவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலீட்டாளருக்கு தமது வைப்புத் தொகையின் ஒரு பகுதியை முதலீட்டு காப்புறுதித் திட்டத்தின்கீழ் பெற்றுக்கொள்ள முடியும் என மத்தியவங்கி அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் இலங்கை மத்தியவங்கியிடம் நாம் வினவினோம். இந்த இரண்டு நிதி நிறுவனங்களின் முதலீட்டாளர்களுக்கு நட்ட ஈட்டை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக மத்தியவங்கியின் உதவி ஆளுநர் எச்.ஏ. கருணாரத்ன தெரிவித்தார்.