தாழமுக்க பிரதேசம் இலங்கையை விட்டு நகர்கின்றது

தாழமுக்க பிரதேசம் இலங்கையை விட்டு நகர்கின்றது

by Staff Writer 07-10-2018 | 6:31 PM

அரபுக்கடலின் தென்கிழக்குப் பகுதியில் காணப்படும் தாழமுக்க பிரதேசம் இலங்கையில் இருந்து நகர்ந்து செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இன்றிரவு நாட்டின் தென், மத்திய, சப்ரகமுவ, மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான கடும் மழை பெய்யும் என திணைக்களம் தெரிவிக்கின்றது. வங்காள விரிகுடா மற்றும் வடக்கு அந்தமானின் தென்கிழக்குத் தீவுகளில் தாழமுக்கம் உருவாகும் சாத்தியம் நிலவுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, களுத்துறை, காலி, பதுளை மற்றும் கேகாலை மாவட்டத்தின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலவும் மழையுடனான வானிலையால் களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் கொழும்பு, களனி, கொலன்னாவ, கடுவளை மற்றும் பியகம ஆகிய பிரதேசங்களிலுள்ள மக்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடும் மழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்வடைந்துள்ளது. களுத்துறை மாவட்டத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் யூ.டி.சி. ஜயலால் தெரிவித்துள்ளார். இதேவேள, காலி வதுரம்ப ஊரபஹல பகுதியில் மழை வௌ்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், நேற்றிரவு பெந்தர ஆற்றின் கிளை ஆறான முனுவல்வத்த ஆறு பெருக்கெடுத்ததால் வெலிபன்ன நல்லகொட பகுதியில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மேலும், கடும் மழையுடனான வானிலை காரணமாக கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. பொரளை - வனாத்தமுல்ல ஹல்கஹகும்பு ரவத்த பகுதியில் 480 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். மழையினால் பாதிக்கப்பட்டவர்கள் 2 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். குறித்த பகுதியில் 4 அடி வரையில் நீர் நிரம்பியுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, கிங் கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் ஆற்றின் இருமருங்கும் நீரில் மூழ்கியுள்ளதாக முல்கட, பம்பருஹிகட, குச்சியாவத்த, இனிமங்கட உள்ளிட்ட பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதனால், பத்தேகம உடுகம மற்றும் பத்தேகம அகலிய வீதியின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மாத்தறை - வெலிகம கொக்மாதுவ 5ஆம் கட்டை பகுதி நீரில் மூழ்கியுள்ளதால் மாத்தறை - கொக்மாதுவ அதிவேக நெடுஞ்சாலைக்கு உட்பிரவேசிக்கும் பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக புத்தளம் - வனாத்தவில்லு, இறால்மடுவ குளத்தின் குளக்கட்டின் ஒரு பகுதி உடைந்துள்ளது. இதனால், 125 ஏக்கர் வயல் நிலப்பரப்பு நீரில் மூழ்கியுள்ளது. இதேவேளை, கலா ஓயா பெருக்கெடுத்துள்ளமையினால் வில்பத்து சரணாலயத்துக்கு பிரவேசிக்கும் எழுவான் குளம் வீதி 3 அடி உயரத்திற்கு நீரில் மூழ்கியுள்ளது. இதேவேளை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பென்ன இடைமாறல் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்துகம அளுத்கம வரையினான வீதி நேற்றிரவு நீரில் மூழ்கியதைத் தொடர்ந்து வெலிப்பென்ன இடைமாறல் மூடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, வெலிப்பென்ன இடைமாறலில் அதிவேக நெடுஞ்சாலைக்கு வாகனங்கள் உள்நுழையவோ, வௌியேறவோ முடியாது என வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. வரக்காபொல உடோவிட பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி நால்வர் காயமடைந்துள்ளனர். மண்சரிவினால் 3 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளது. மேலும், அங்குருவாத்தொட்ட பகுதியில் களுகங்கையின் நீர்மட்டம் 10 மீற்றர் வரை அதிகரித்துள்ளதால் அப்பகுதிக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரெமுன, மதுராவல, யால உள்ளிட்ட தாழ்நில பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர். இதேவேளை, குக்குலேகங்க ஆறு பெருக்கெடுத்துள்ளதால் புளத்சிங்கள, மோல்காவ பிரதான வீதியின் தம்பல மற்றும் எட்டம்பகஸ் சந்தி முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதால் வாகன போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. மத்துகம, அகலவத்த, மோல்காவ, அவித்தாவ, அளுத்கம, குடலிகம உள்ளிட்ட பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. இதேவேளை, தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதியில் கனரக வாகனங்கள் பயணிக்கத் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியின் பத்தனை திம்புள்ள தோட்டத்தை அண்மித்த வீதியில் பாரிய குழியொன்று உருவாகியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள - பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இதனால், அவ்வீதியினூடாக கனரக வாகனங்கள் செல்ல தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றீடாக ஹட்டன் - கினிகத்தேனை வீதியைப் பயன்படுத்த முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதி புனரமைப்புப் பணிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் காலி மாவட்டத்தின் பொத்திவெல பகுதியிலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. பொத்திவெல பகுதியில் 334.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. காலி - ஹினிதும பகுதியில் - 277.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள மதுகம - வோகன் தோட்டத்தில் 235.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. பத்தேகம பகுதியில் 195 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், பாதுக்கயில் 186.7 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.