காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்வு

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்வு: கழிவுப்பொருட்களை அகற்ற சிரமதானம் முன்னெடுப்பு

by Staff Writer 06-10-2018 | 9:01 PM
Colombo (News 1st)  285 ஹெக்டெயர் பரப்பளவைக் கொண்ட காசல்ரீ நீர்த்தேக்கம், தேசிய மின் கட்டமைப்பிற்கு சொந்தமான பிரதான நீர்த்தேக்கமாகும். தற்போது நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து, இந்த காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது. இதனால் நீர்த்தேக்கத்திற்குள் கொட்டப்பட்டிருந்த உக்காத கழிவுப்பொருட்களை நீர்த்தேக்கத்தில் இருந்து அகற்றும் சிரமதானமொன்று இன்று இடம்பெற்றது. சிரமதானப்பணிகளில் நுவரெலியா மாவட்ட செயலக அதிகாரிகள், பாதுகாப்புப் பிரிவினர், பிரதே சபை அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் கலந்துகொண்டிருந்தனர். நோர்வூட் பிரதேசத்தில் இருந்து பாய்ந்து செல்லும் கெசெல்கமுவ ஓயாவும், ஹட்டன் பிரதேசத்தில் இருந்து பாய்ந்து செல்லும் டிக்கோயாவின் நீரும், நீர்த்தேக்கத்தில் இணையும் பகுதியில் சிறிது காலமாக திண்மக்கழிவுகள் சேர்வதாக நியூஸ்ஃபெஸ்ட் பிராந்திய செய்தியாளர் கூறினார். இது தொடர்பில் கவனம் செலுத்திய தேசிய நீர்வாழ் உற்பத்தி அதிகார சபையின் நுவரெலியா அலுவலகத்தின் ஊடாக இந்த சிரமதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிரமதானத்தை முன்னிட்டு கெசெல்கமுவ ஓயா மற்றும் டிக்கோயாவுக்கு அருகிலுள்ள மக்களை தெளிவூட்டும் செயற்பாடொன்றும் முன்னெடுக்கப்பட்டது.