பாகிஸ்தானிய எதிர்க்கட்சி தலைவர் ஷெபாஸ் ஷெரீப் கைது

ஊழல் குற்றச்சாட்டில் பாகிஸ்தானிய எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் கைது

by Staff Writer 06-10-2018 | 7:08 AM
ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பாகிஸ்தானிய எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு ஊழல் வழக்குகளில் அவர் தொடர்புபட்டுள்ளதால், பாகிஸ்தானின் ஊழலுக்கு எதிரான அமைப்பினால் கைது செய்யப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஷெபாஸ் ஷரீப் ஊழலுக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழு முன்னிலையில் நேற்று ஆஜராகியிருந்தார். விசாரணைகளின்போது, இரண்டு பெரிய திட்டங்களில் இடம்பெற்ற ஊழல் மற்றும் ஒழுங்குவிதிகளை மீறியமை தொடர்பில் உரிய வகையில் அவர் பதிலளித்திருக்கவில்லை. இதனையடுத்தே, அவர் கைது செய்யப்பட்டதாக, ஊழலுக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவின் பேச்சாளர் அறிவித்துள்ளார். அத்துடன், இன்றைய தினம் அவர் பொறுப்புடைமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, தடுத்துவைப்பதற்கான அனுமதி பெறப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஷெபாஸ் ஷரீப் பாகிஸ்தானிய முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரர் என்பதுடன், கடந்த பொதுத் தேர்தலில், முஸ்லிம் லீக் கட்சித் தலைவராகச் செயற்பட்டிருந்தார். தேர்தலில் இரண்டாவது பெரும்பான்மையை, அவரது முஸ்லிம் லீக் கட்சி பெற்றமையால், எதிர்க்கட்சித்தலைவராக அவர் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இவரது சகோதரரும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப்பும் அவரது மகளும், ஊழல் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.