அதிகாரப்பகிர்வு யாப்பினூடாக தீர்க்கப்பட வேண்டியது

அதிகாரப் பகிர்வு கோரிக்கை யாப்பினூடாக தீர்க்கப்பட வேண்டியது: மார்க் ஃபீல்ட்டுக்கு சம்பந்தன் விளக்கம்

by Staff Writer 06-10-2018 | 3:46 PM
Colombo (News 1st) ஐ.நா. மனித உரிமை பேரவையின் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் இரண்டு வருடங்கள் கால அவகாசம் கோரியிருந்தமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பிரித்தானியாவின் ஆசிய பிராந்தியத்திற்கான அமைச்சர் மார்க் ஃபீல்ட்டுக்கு தௌிவுபடுத்தியுள்ளார். மார்க் ஃபீல்ட்டை, இரா.சம்பந்தன் கொழும்பில் நேற்று (05) சந்தித்த போதே இந்த விடயங்கள் குறித்து தௌிவுபடுத்தப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் நீண்டகால அதிகாரப் பகிர்வு கோரிக்கையானது அரசியல் யாப்பினூடாக தீர்வு காணப்பட வேண்டிய விடயம் எனவும் இரா.சம்பந்தன் இதன்போது கூறியுள்ளார். இந்த விடயம் குறித்து 30 வருட காலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் தொடர்பிலும் இரா.சம்பந்தன் தௌிவுபடுத்தியதாக கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பு உருவாக்கம் இனியும் தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் என இதன்போது அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த கோரிக்கைக்கு தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தேர்தலூடாக அங்கீகாரம் வழங்கி வருவதாகவும் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். மக்களின் ஜனநாயக தீர்ப்பிற்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் எனவும் மார்க் ஃபீட்ல்டுடனான சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும் இரா.சம்பந்தன் கூறியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் அரச தலைவர்கள் மத்தியில் விருப்பு குறைவாகக் காணப்படுவதாக இந்த சந்திப்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ளார். பல விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்ட போதிலும், அரச தலைவர்கள் மத்தியில் தயக்க நிலை காணப்படுவதாக எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்