தப்பிக்க முயன்ற சந்தேகநபர் ஓயாவில் மூழ்கி பலி

ஜா - எல துப்பாக்கிச் சூட்டின் சந்தேகநபர் தப்பிக்க முயன்றபோது ஓயாவில் மூழ்கி பலி

by Staff Writer 06-10-2018 | 9:32 AM
Colombo (News 1st) கந்தான- வெலிகம்பிட்டி பகுதியில் பெண்ணொருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேகநபர், பொலிஸாரிமிருந்து தப்பிச்செல்வதற்கு முயற்சித்த வேளை, ஜா எல - தன்டுகம் ஓயாவில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இலந்தாரிகே சஞ்சீவ என அழைக்கப்படும் அமுனுகம சஞ்சீவ எனும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். அநுராதபுரம் - திரிப்பனே பகுதியில் வைத்து, களனி விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு கொழும்பிற்கு அழைத்துவந்த சந்தர்ப்பத்திலேயே சந்தேகநபர், தப்பிச்செல்ல முயற்சித்துள்ளார். மலசலகூடம் செல்ல வேண்டும் என பல சந்தர்ப்பங்களில் சந்தேகநபர் பொலிஸாரிடம் கேட்டிருந்ததையடுத்து, தண்டுகம் ஓயா பாலத்திற்கு அருகில் பொலிஸார் வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதன்போது, பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர், பாலத்திலிருந்து குதித்துள்ளார். இந்தநிலையில், சந்தேகநபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். உயிரிழந்த சந்தேகநபரின் சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சிறைத்தண்டனை அனுபவித்துவரும் கனேமுல்ல சஞ்சீவ எனும் குற்றவாளியின் ஒப்பந்தத்திற்கு அமைய அஜித் எனும் நபரை கொலை செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், இலக்குத் தவறியதில் காரில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். ஹெரோயின் தொடர்பில் குறித்த நபரைக் கொலை செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். ஜா-எல வெலிகுருந்துவத்த பகுதியைச் சேர்ந்த 40 வயதான பெண்ணொருவரே துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவராவார்.