சீரற்ற வானிலையால் தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு

சீரற்ற வானிலையால் தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு

சீரற்ற வானிலையால் தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு

எழுத்தாளர் Bella Dalima

06 Oct, 2018 | 8:33 pm

Colombo (News 1st) தமிழகத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் தொடர்ந்தும் பெய்து வரும் மழை காரணமாக மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்லவில்லை.

ஆழ்கடலில் மீன்பிடித்து வரும் குமரி மாவட்ட மீனவர்கள் கரை திரும்பி வருவதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், கடந்த 24 மணித்தியாலங்களில் காரைக்கால் மாவட்டத்தில் 120 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சுமார் 20 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

எவ்வாறாயினும், தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது.

தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால், கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை மீளப்பெறப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிக மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு இல்லாததால், சிவப்பு எச்சரிக்கையை விலக்கிக் கொள்வதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

எனினும், காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் நாளை வரை பல இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால் குமரிக்கடல், இலட்சத்தீவு பகுதிகளுக்கு எதிர்வரும் 8 ஆம் திகதி வரை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கேரள மாநிலத்தின் 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 அணைகளில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.

எதிர்வரும் 9 ஆம் திகதி பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த மழை காரணமாக கேரளா பேரிழப்பை சந்தித்தது.

இது போன்றதொரு இழப்பை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மீட்புக் குழுவை கேரளாவிற்கு வரவழைத்துள்ளதாக கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஏற்பட்ட மழை வௌ்ளம் காரணமாக 493 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்