சீனி விலை அதிகரிப்பால் இலாபமடைந்துள்ள மூன்று வர்த்தகர்கள்

சீனி விலை அதிகரிப்பால் இலாபமடைந்துள்ள மூன்று வர்த்தகர்கள்

சீனி விலை அதிகரிப்பால் இலாபமடைந்துள்ள மூன்று வர்த்தகர்கள்

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2018 | 9:45 pm

Colombo (News 1st)  புதிய வரி முறையினால் சந்தையில் சீனி விலை அதிகரித்துள்ளது.

எனினும், இந்த விலை அதிகரிப்பினால் மூன்று வர்த்தகர்கள் மாத்திரம் நன்மையடைந்துள்ளனர்.

சீனிக்காக விதிக்கப்பட்டிருந்த 31 ரூபா விசேட தீர்வை வரியை நீக்கி, புதிய வியூகமொன்றைக் கடந்த செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி அறிமுகப்படுத்துவதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்தது.

புதிய வரி முறைக்கு அமைய, ஒரு கிலோகிராம் சீனிக்கு தற்போது 43 ரூபா வரி அறவிடப்படுகின்றது.

உலக சந்தையில் ஒரு கிலோகிராம் சீனிக்கு செலுத்த வேண்டிய விலை, கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது குறைவடைந்துள்ளதுடன், சில்லறை விலையில் இந்த மாற்றம் எவ்வித தாக்கத்தையும் செலுத்தாது என நிதி அமைச்சு குறிப்பிட்டிருந்தது.

எனினும், இந்த வரி விதிக்கப்படுவதற்கு முன்னர் மொத்த விற்பனை சந்தையில் 91 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் சீனியின் விலை தற்போது 100 ரூபாவைத் தாண்டியுள்ளது.

மொத்த விற்பனை சந்தையில் மாத்திரம், ஒரு கிலோகிராம் சீனியின் விலை அண்ணளவாக 15 ரூபாவை விட அதிகரித்துள்ளது.

வரியை மாற்றுவதற்கு முன்னர் நாட்டின் மொத்த சீனியும், பிரமிட் வில்மர், வில்சன் ட்ரேடிங் மற்றும் பல்லேகொட ட்ரேடிங் என்ற மூன்று நிறுவனங்களிடம் காணப்பட்டது.

தம்மிடம் இருந்த அதிகளவான சீனியை பிரமிட் வில்மர் நிறுவனம் கொள்வனவு செய்ததாக இறக்குமதியாளர்கள் கூறினர்.

அதற்கமைய, 60 ஆயிரம் மெட்ரிக் தொன் சீனி இந்த மூன்று வர்த்தகர்களிடமும் உள்ளதாக வாழ்க்கைச்செலவு குழுவில் வெளிக்கொணரப்பட்டிருந்தது.

வரி அதிகரிப்பினால் கிடைத்த பயனால், ஒரு கிலோகிராம் சீனியின் ஊடாக குறைந்தபட்சம் 10 ரூபா இலாபத்தை ஈட்டி வருவதுடன், 60 ஆயிரம் மெட்ரிக்தொன்னிற்கு குறைந்தபட்சம் 600 மில்லியன் இலாபத்தை ஈட்டக்கூடும்.

இந்த நிலையைக் கருத்திற்கொண்டு சீனிக்கான நிர்ணய விலையை விதிப்பதற்கு கடந்த 2 ஆம் திகதி வாழ்க்கைச் செலவுக்குழு தீர்மானித்திருந்தது.

அதற்கமைய, ஒரு கிலோகிராம் சீனியின் மொத்த விலை 95 ரூபாவாகவும் சில்லறை விலை 100 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

நிர்ணய விலையை விதிப்பதற்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு ஆலோசனை வழங்கிய போதிலும், இதுவரையில் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

நிர்ணய விலையை வர்த்தமானியில் அறிவிக்கும் பொறுப்பு நுகர்வோர் அதிகார சபைக்கே உள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்