7 பேர் விடுதலை: ஆளுநர்  கையெழுத்திடாதது ஏன்? 

7 பேர் விடுதலை: ஆளுநர்  கையெழுத்திடாதது ஏன் - தமிழர் வாழ்வுரிமை கட்சித்தலைவர்  கேள்வி  

by Bella Dalima 05-10-2018 | 4:29 PM
Colombo (News 1st)  பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் அமைச்சரவைத் தீர்மானத்தில் ஒரு மாத காலமாகியும் ஆளுநர் கையெழுத்திடாதது ஏன் என தமிழர் வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்வதற்கான பரிந்துரையை தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. எனினும், மாதமொன்று கடந்தும் இதுவரை ஆளுநர் அதுகுறித்து எவ்வித தீர்மானத்தையும் வௌியிடவில்லை என்பதுடன் அதனைத் தமிழ்நாடு அரசும் கண்டுகொள்ளவில்லை என வேல்முருகன் சுட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''7 பேர் விடுதலையை பரிசீலிக்கிறேன்'' என ஆளுநர் கூறுவது கூட சட்டவிரோதமாகும் என குறிப்பிட்டுள்ளார். 28 ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருப்பவர்கள், தீர்மானத்தைப் பெற்ற மறு நிமிடமே அதில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஆனால் ஆளுநர் அவ்வாறு செய்யவில்லை எனவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசும் எழுவர் விடுதலைத் தீர்மானத்தைப் பற்றியோ ஆளுநர் அதில் கையெழுத்திடாதது பற்றியோ கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. வேண்டுமென்றே, 7 பேரின் விடுதலை விடயத்தில் அரங்கேற்றப்படும் நிகழ்வுகளை பொறுத்துக்கொள்ள முடியாது என தமிழர் வாழ்வுரிமை கட்சித்தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். சட்டப்படி, அடுத்த தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி , உடனடியாக ஆளுநரிடம் கையெழுத்துப் பெறுமாறு தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழக அரசை வலியுறுத்துகிறது எனவும் கட்சியின் தலைவர் வேல்முருகன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.