நாலக்க, நாமலுக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

நாலக்க டி சில்வா, நாமல் குமார ஆகியோருக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

by Staff Writer 05-10-2018 | 9:41 PM
Colombo (News 1st) பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாலக்க டி சில்வா மற்றும் ஊழல் ஒழிப்பு செயலணியின் நடவடிக்கை பிரிவு பணிப்பாளர் நாமல் குமார ஆகியோரை எதிர்வரும் 8 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸ் ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் ஊழல் ஒழிப்புப் பிரிவின் நடவடிக்கை பிரிவு பணிப்பாளர் நாமல் குமாரவினால் அண்மையில் தகவல் வௌிக்கொணரப்பட்டது. அந்த தகவல் குறித்து விசாரணை மேற்கொண்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் ஆகியோரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். மிகவும் சர்ச்சைக்குரிய இந்த விடயம் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், நாமல் குமார மற்றும் நாலக டி சில்வா ஆகியோர் வௌிநாட்டுக்கு சென்றால் விசாரணைக்கு பாதகம் ஏற்படும் எனவும் மன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் இருவரையும் நீதிமன்றத்திற்கு வரவழைத்து, அனுமதியின்றி வௌிநாடு செல்வதற்கு தடை விதிக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களம் இன்று மன்றில் கோரிக்கை விடுத்தது. பயங்கரவாத தடுப்புப் பிரிவிலிருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைப்பற்றப்பட்ட LMG ரக துப்பாக்கிகள் இரண்டையும் அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் சமர்ப்பித்து அறிக்கையை பெறுமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார். பொலிஸ் மத்திய களஞ்சியசாலையிலிருந்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் பெற்றுக்கொள்ளப்பட்ட இந்த இரண்டு துப்பாக்கிகளும் செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதி பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வாவின் ஆலோசனைக்கு அமைய, இரண்டு நபர்களுக்கு வழங்கப்பட்டதாக சட்ட மா அதிபர் திணைக்களம் இன்று மன்றுக்கு அறிவித்துள்ளது. துப்பாக்கியை வௌியில் எடுத்துச்செல்லும் போது அதற்கான காரணம், துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதா இல்லையா என்பது குறித்தும், பெற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் மீள வழங்கிய திகதியும் அறிக்கையிடப்பட வேண்டும் என்ற நிலையில், இந்த துப்பாக்கிகள் தொடர்பில் எவ்வித பதிவுகளும் இல்லை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், அவை செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி மீள வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக அந்த துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு அவற்றை பகுப்பாய்விற்கு உட்படுத்த வேண்டும் என விசாரணை அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு நீதவானால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.