தமிழ் மொழி மூலம் 2 யாழ். மாணவர்கள் முதலிடம்

தரம் 5 புலமைப்பரிசில்: தமிழ் மொழி மூலம் யாழ். மாணவர்கள் இருவர் முதலிடம்

by Staff Writer 05-10-2018 | 3:41 PM
Colombo (News 1st) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ளன. இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் இரண்டு மாணவர்கள் அகில இலங்கை மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர். பிலியந்தலை சோமவீர சந்திரசிறி பாடசாலையின் புமித் மெத்நுல் விதானகே மற்றும் வெயாங்கொட புனித மரியாள் கல்லூரியின் சனுப திமத் பெரேரா ஆகியோர் 199 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையின் மகேந்திரன் திகழொழிபவன், சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலையின் நவஸ்கன் நதி ஆகியோர் 198 புள்ளிகளுடன் தமிழ் மொழி மூலம் முதலிடங்களை சுவீகரித்துள்ளனர். இவர்களுடன்ஹெட்டியாராச்சிகே செனூஜி அகித்மா ஹெட்டியாராச்சி 198 புள்ளிகளைப் பெற்றுள்ளார். வவுனியா நெலுக்குளம் சிவபுரம் ஆரம்பப் பாடசாலை மாணவன் பாலகுமார் ஹரிதிகன் சுஜா 197 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் நிலையிலுள்ளார். கொழும்பு இராமநாதன் இந்துக்கல்லூரி மாணவி நேஷிகா சம்தினேஷ், கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியின் சுகா சாஹீர் மொஹமட் ஆகியோர் 196 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். அத்துடன், அக்கரைப்பற்று ஸாஹிரா கல்லூரியின் தஸ்லிம் ஸல்ஜி அஹமட், மட்டக்களப்பு உன்னிச்சை தமிழ் பாடசாலையின் ஜெயராஜ் துஹின் தரேஷ், கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் கனகலிங்கம் தெனுஷன், யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடத்தின் ஜயந்தன் கிருஜனா, தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவி சாருகா சிவனேஸ்வரன் ஆகியோர் 196 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலுள்ளனர். தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று முற்பகல் வௌியிடப்பட்டன. பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்தார்.