அருவைக்காட்டில் குப்பைகொட்டும் திட்டம் நிராகரிப்பு

அருவைக்காட்டில் குப்பைகளைக் கொட்டும் திட்டம் நிராகரிப்பு: சேரக்குழிக்கு மாற்றம்

by Staff Writer 05-10-2018 | 8:46 PM
Colombo (News 1st) புத்தளம் - அருவைக்காடு பகுதியில் குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அறிக்கை நிராகரிக்கப்பட்டமையால் , சேரக்குழி பகுதிக்கு கொண்டுவரப்பட்டதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க  ரணவக்க இன்று தெரிவித்தார். அருவைக்காடு பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் சேரக்குழியிற்கு மாற்றப்பட்டமை தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் நேற்று செய்தி வௌியிட்டது. அந்த உண்மையை அமைச்சர் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளார். இந்தத் திட்டத்திற்காக அனுமதிப்பத்திரம் வழங்கும் ஒரு நிறுவனமே வட மேல் மாகாண சுற்றுச்சூழல் அதிகார சபை. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அறிக்கையை பொருட்படுத்தாது தன்னிச்சையாக செயற்படும் வட மேல் மாகாண சுற்றுச்சூழல் அதிகார சபையை நிராகரிக்குமாறு சுற்றுச்சூழல் அமைப்புகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளன. நாட்டின் மாகாண சபையின் கீழ் செயற்படும் ஒரு சுற்றுச்சூழல் அதிகார சபையாக வட மேல் மாகாண சுற்றுச்சூழல் அதிகார சபை உள்ளதுடன், இது முழமையாக சட்டவிரோதமானது என சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர். பல சூழல் பிரச்சினைகள் எழுந்துள்ள நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதிப் பத்திரத்தினை வழங்கியதும் இந்த நிறுவனமே. சுற்றாடல் அறிக்கை இல்லாது நுரைச்சோலை அனல் மின் நிலையம் செயற்படுவதற்கு இந்த நிறுவனமே அனுமதி வழங்கியது. இவ்வாறான நிறுவனம் அருவைக்காடு குப்பை பதப்படுத்தல் நிலையத்திற்கு அனுமதி வழங்கியது புதுமையான விடயமல்ல.